மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருமலை

அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருமலை, சிவகங்கை மாவட்டம்.

+91 97888 43275

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மலைக்கொழுந்தீஸ்வரர்
அம்மன் பாகம்பிரியாள்
தல விருட்சம் காட்டாத்தி மரம்
தீர்த்தம் பொய்கை தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமலை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட இப்பகுதியை, 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திரன் கைப்பற்றினார். அதன்பின், 12ம் நூற்றாண்டில் பாண்டியர் வம்சத்தில் வந்த ஜடாவர்ம குலசேகரன், சோழ மன்னனை வென்று நாட்டை மீட்டார். சிவபக்தனான ஜடாவர்ம குலசேகரன், தான் வெற்றி பெற்றமைக்கு நன்றிக் காணிக்கையாக, இங்கிருந்த மலையில் சிவனுக்கு கோயில் எழுப்பி,”மலைக்கொழுந்தீஸ்வரர்என்று பெயர் சூட்டினான். மிகவும் தொன்மையான இக்கோயிலில் கி.பி.2ம் நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. இங்குள்ள குன்றுகளில் பழைய தமிழர்களின் வரலாற்றைச் சொல்லும் ஓவியங்களும் உள்ளன.

மலைக்கொழுந்தீஸ்வரர் சன்னதிக்கு இடப்புறமுள்ள குடவரை சன்னதியில் அம்பிகையுடன், உமாசகித மூர்த்தி சன்னதி உள்ளது. சிவன் இடது காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டும், வலது கையை மடியில் வைத்து, இடக்கையால் அம்பிகையின் கையைப் பிடித்தபடி சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறார். தலையில் அலங்கரிக்கப்பட்ட மகுடம், காதில் மகர குண்டலங்கள், கழுத்தில் மாலை, இடுப்பில் ஒட்டியாணம், கை விரல்களில் மோதிரம், கைகளில் திருமணத்தின்போது கட்டும் மங்கலக்கயிறு (கங்கணம்), காலில் சிலம்பு என சகல ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார். அம்பிகை உத்குடி ஆசன நிலையில், நாணத்துடன் வலது காலை மடித்து, மணப்பெண் போல இடது கையை தரையில் ஊன்றி அமர்ந்திருக்கிறாள். அம்பிகையை மணம் முடித்த சிவன், மணப்பெண்ணுடன் சொக்கட்டான் ஆடினாராம். இந்த அமைப்பில் இச்சன்னதி அமைந்துள்ளது.

சிவனை விட்டு எப்போதும் பிரியாமல், அவருடனே இருக்கும்படியாக இடது பாகம் பெற்றவள் அம்பிகை. எனவே, இவளுக்குப் பாகம்பிரியாள் என்றும் பெயருண்டு. இந்த பெயருடன் அம்பிகை இங்கு அருள்பாலிக்கிறாள். பெண்கள், கணவருடன் இணக்கமாக இருக்க இவளை வழிபடுகின்றனர். திருமண பிரார்த்தனைக்காக தாலி அணிவித்து வேண்டிக் கொள்வதும் உண்டு. அழகு, அறிவு, நற்குணம், கை நிறைய சம்பளம் என எந்த குறையும் இல்லாதிருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் மட்டும் தள்ளிப்போய்க் கொண்டிருக்கும். இவர்கள் உமாசகித மூர்த்திக்கு மணமாலை அணிவித்து, வணங்கிச் செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

இரண்டு கி.மீ., சுற்றளவுடன் கூடிய மலை மீது அமைந்த கோயில் இது. தீராத நோய், உடல் வலி, முடக்குவாதம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்திக்காக மலைக்கொழுந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலை அர்ச்சனை செய்கின்றனர். குணமானதும் மலையில் பாதங்களை பொறித்து வைக்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.

சுவாமி சன்னதி விமானத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், மகாபலி, பரசுராமர் மற்றும் ராமபிரான் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் வடதிசையில் சிவன், பிரம்மா, மகாவிஷ்ணு மூவரும் ஒரே பாதத்துடன் ஒன்றிணைந்த மூர்த்தியாக காட்சி தரும் ஏகபாதமூர்த்தியையும் தரிசிக்கலாம்.

மலையடிவாரத்தில் தாமரை தீர்த்தக்குளம் உள்ளது. இதில், கங்கையே சங்கமித்திருப்பதாக ஐதீகம். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோர், பித்ருசாபம் உள்ளோர் இத்தீர்த்தக்கரையில் சிரார்த்தம் செய்து வேண்டிக்கொள்கின்றனர். ஆடி, தை அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமிருக்கும்.

பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். திருக்கார்த்திகையன்று மலையுச்சியில் தீபமேற்றுவர். இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருக்கிறது. இச்சன்னதிக்கு முன்புறம் மகிஷாசுரனை வதம் செய்தபடி எட்டு கைகளுடன் துர்க்கை இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு. அருகில் ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக சப்தகன்னியர் உள்ளனர். சுப்பிரமணியர், அம்பிகையின்றி தனித்து காட்சி தருகிறார். இங்குள்ள கால பைரவருடன் நாய் வாகனம் இல்லை. கையில் கதை வைத்திருக்கிறார். நவக்கிரகம், சூரியன், சந்திரன், காவல் தெய்வம் மாவீரர் கருவபாண்டியன் ஆகியோரும் உள்ளனர். சன்னதிக்கு முன்புறம் விநாயகர், முருகன் உள்ளனர். அருகில் சேவல் கொடியும், ஆடு, மயில் வாகனங்களும் உள்ளன. முருகனுக்கு குண்டோதரன் குடைப்பிடித்தபடி இருக்கிறான். அருகில் அக்னி பகவான் உள்ளார்.

திருவிழா:

ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி, ஆடி, தை அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை.

கோரிக்கைகள்:

திருமணத் தடை நீங்க, தீராத நோய், உடல் வலி, முடக்குவாதம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் உமாசகித மூர்த்தியை வழிபடுகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோர், பித்ருசாபம் உள்ளோர் இத்தீர்த்தக்கரையில் சிரார்த்தம் செய்து வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி விருட்சத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். வில்வ இலையால் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

வழிகாட்டி:

திருப்புத்தூர் சிவகங்கைப் பெருவழியில் ஒக்கூரிலிருந்து பிரியும் கீழப்பூங்குடிச் சாலை திருமலைக்கு வழிவிடுகிறது. கீழப்பூங்குடியில் இருந்து வலப்புறம் பிரியும் பாதையில் 4 கி. மீ. தொலைவு சென்றால் ஒரு கைக்காட்டியைச் சந்திக்கலாம். அதில் அளகைமாநகரி எனக் குறிக்கப்பட்டிருக்கும் திசையில் அரைக் கிலோமீட்டர் பயணித்தால் திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில் உள்ளது.

கீழே காணப்படும் ஆராய்ச்சி மடல் ஏதோ ஒரு வலைப்பூவில் வந்தது. பெயர் தெரியவில்லை. நன்றி.


மலையின் தாழ்வான பகுதியில் இடம்பெற்றிருக்கும் இந்தக் கோயில் வளாகத்தின் முதன்மை வாயில் கிழக்குப் பார்வையாக உள்ளது. மற்றொரு வாயில் வடபார்வையாக அமைந்துள்ளது. பாறையின் சரிவில் வெட்டப்பட்டிருக்கும் குடைவரையைப் பின்புலமாக்கி, அதன் முன்புறத்தே சுற்றுமாளிகை பெற்றுள்ள சுருங்கிய வளாகத்தில் சிவபெருமானுக்கொன்றும் பாகம் பிரியாதாள் என்றழைக்கப்படும் இறைவிக்கு ஒன்றுமாய் இரண்டு கற்றளிகள் உள்ளன.
முதன்மை வாயில் எளிய இருதளக் கோபுரமாக அமைய, கீழ்த்தள ஆரவரிசையில் சாலைக்கான இடத்தில் இறைவனின் திருமணக்காட்சி அலங்கார வளைவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறத்தும் கர்ணகூடங்கள். கோபுரத்தைத் தழுவித் தெற்கு, வடக்கு நோக்கி நீளும் கிழக்கு மதில்சுவர் வடக்கில் விரிந்து, மேற்கில் படர்ந்து பாறையில் முடிகிறது. வாயிலின் தென்புறத்தே கிழக்குப் பார்வையில் பின்னாளைய கட்டுமானமாய் ஒருதள வேசரப் பிள்ளையார் கோயில் எழுந்துள்ளது.


வளாகத்துள் வாயிலை ஒட்டி விரியும் கிழக்கு மாளிகைப்பத்தியில் வடபுறம் சந்திரனும் தென்புறம் சூரியனும் நிறுத்தப்பட்டுள்ளனர். குடைவரைக்கு அழைத்துச் செல்லும் வழிக்கு முன்னே தென்புறத்தே வடபார்வையாக நிற்பவர் மாவீரர் கருவ பாண்டியர். அடர்த்தியான மீசையுடன் கைகளைக் குவித்து வணங்கி கம்பீரமாய்க் காட்சியளிக்கும் இந்தப் பெரியவர் கோயில் காவலர்களின் முன்னோடியாம். அவரை அடுத்துக் குடைவரைக்கான படித்தளம் வளர்கிறது. வாயிலுக்கு நேர் எதிரே உள்ள மேற்கு மாளிகைப் பத்தியின் தென்புறத்தே அறை ஒன்றில் பிள்ளையாரும் அவருக்கு முன்னுள்ள நடைப்பத்தியில் மகிடாசுரமர்த்தனியும் உள்ளனர். கிழக்குப் பார்வையாக உள்ள பிள்ளையார் பிற்காலத்தவர். பின்கைகளில் பாசம், அங்குசம் பெற்று இலலிதாசனத்தில் உள்ள அவரது முன்கைகளில் இடப்புறம் மோதகம், வலப்புறம் உடைந்த தந்தம். அரும்புச்சரம், உதரபந்தம், முப்புரிநூல், கரண்டமகுடம் பெற்றுள்ள அவரது இடம்புரித் துளைக்கையிலும் மோதகம்.


நடைப்பத்தியில் உள்ள மகிடாசுரமர்த்தனிதான் இந்த வளாகத்துள்ள தனிச் சிற்பங்களுள் பழைமையானதாக உள்ளது. மகிடனின் தலைமீது இடப்பாதத்தைச் சமத்திலும் வலப்பாதத்தை, வலமுழங்காலை இலேசாக மடக்கிய நிலையில் திரயச்ரமாகவும் நிறுத்தியுள்ள தேவியின் வலக்கைகளில் முன்கை இடுப்பருகே கடகமாய் அமைய, இரண்டாம் கை சற்றுத் தள்ளிய நிலையில் கடகமாய் நீண்டுள்ளது. மூன்றாம், நான்காம் கைகளில் கத்தியும் சங்கும் இடம்பெற்றுள்ளன. நான்காம் கைக்குப் பின்னாலுள்ள முத்தலை ஈட்டி சிதைந்துள்ளது.


இடக்கைகளில் மேற்கை எறிநிலைச் சக்கரம் கொள்ள, கீழ்க்கைகளில் மேலிருந்து கீழாக வில்லும் கேடயமும் உள்ளன. இட முன்கை இடுப்பில் அமர்ந்துள்ளது. இடையில் இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள அம்மையைப் பூட்டுக்குண்டலங்கள், கரண்டமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள் அழகு செய்கின்றன. மார்பகங்களைக் கச்சு மறைத்துள்ளது. அம்மையின் வலப்புறம் சிம்மமும் இடப்புறம் மானும் காட்டப்பட்டுள்ளன. இரண்டுமே அம்மையை நீங்கிச் செல்வன போல் நடைபயின்றாலும் முகங்கள் அம்மைக்காய்த் திரும்பியுள்ளன. இரண்டுமே முன்னங்கால்களுள் ஒன்றை மேலுயர்த்தியுள்ளன.


மேற்கு மாளிகையின் வடபுற அறையில் கிழக்குப் பார்வையாக ஆறுமுகன் இடம்பெற்றுள்ளார். வல முன்கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன்கை கடியவலம்பிதமாய் உள்ளது. ஏனைய பத்துக் கைகளில் பல்வேறு கருவிகள். பிள்ளையார், முருகன் அறைகளுக்கு இடைப்பட்ட மாளிகைப்பத்தி மடைப் பள்ளியாக்கப்பட்டுள்ளது. வடபுற மாளிகைப்பத்தியின் இடையே அமைந்துள்ள வாயில் மலையை ஒட்டியுள்ள குளம், அதைத் தொடர்ந்து விரியும் பசுமையான வயல்கள் என இயற்கை அழகு சொட்டும் காட்சி. இவ்வழி உள்ள படிக்கட்டுகளில் இறங்கினால் மலையின் வடசரிவில் நடைபயிலலாம்.


வாயிலை அடுத்த பகுதியில் உள்ள பூக்கட்டும் இடம் சிறப்புக்குரியது. அங்குள்ள அழகிய சந்தனக்கல்லைச் சிலுவினிப்பட்டியைச் சேர்ந்த மாயகண் தந்ததாக அதில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுக் கூறுகிறது. வட்டவடிவமாக உள்ள சிறிய அளவிலான நீர்த்தொட்டியைக் கள்றாதினிப்பட்டி மலைக் கொழுந்து பேச்சு கரியாம்பு ஆசாரி காளயுக்தி ஆண்டு ஐப்பசித் திங்கள் மூன்றாம் நாளில் தந்ததாக அதன் மீதுள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது. பூப்பலகையாக மாற்றப்பட்டுள்ள பாறைப் பலகை ஒன்றில் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் சிதைவுற்ற கல்வெட்டொன்று காணப்படுகிறது.


பூக்கட்டும் இடத்தை ஒட்டித் தென்வடலாக நீளும் அம்மன் விமானமும் முகமண்டபமும் சுற்றின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன. அம்மன் திருமுன்னுக்குக் கிழக்கில் ஒன்பான் கோள்கள் மேடை விளங்க, வடகிழக்கு மூலையில் சேத்ரபாலர் காட்சிதருகிறார். நாய் ஊர்தியற்றவராய், காலருகே நிறுத்தப்பட்டுள்ள கதை மீது வல முன் கை ஊன்ற, இட முன் கையில் தலையோடு பெற்று, நிர்வாணியாய்ப் பின்கைகளில் வலப்புறம் உடுக்கையும் இடப்புறம் பாம்பும் கொண்டு சுடர் முடியுடன் நிற்கும் அவர் செவிகளில் வலப்புறம் மகரகுண்டலம்; இடப்புறம் பனையோலைக் குண்டலம்.


கிழக்குப் பார்வையாய் இருதள நாகரமாக உள்ள இறைவன் விமானம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டு நான்முக அரைத்தூண்கள் சூழ்ந்த சுவர் பெற்று எழுகிறது. ஆறங்க ஆரமும் சிறிய இரண்டாம் தளமும் பெற்றுள்ள அதன் கிரீவ நாசிகையில் தென்புறம் ஆலமர் அண்ணலும் மேற்கில் பரமபதநாதரும் வடக்கில் நான்முகனும் இடம்பெற, கீழ்த்தளக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. வடபுறத்தே சிறிய அளவிலான கொற்றவைத் திருமுன்னும் சண்டேசுவரர் திருமுன்னும் காணப்படுகின்றன. முகமண்டப வாயிலின் தென்புறத்தே பிள்ளையார் சிற்பமும் வடபுறத்தே பழனியாண்டிச் சிற்பமும் அமைய, கருவறையில் மலைக் கொழுந்தீசர் சதுர ஆவுடையாரில் நீண்ட உருளைப்பாணத்துடன் காட்சிதருகிறார்.


தெற்குப் பார்வையாக உள்ள பாகம்பிரியாதாள் விமானம் இறைவன் விமானம் போலவே அங்கங்கள் பெற்று இருதள நாகரமாக எழுந்துள்ளது. கருவறையில் சமபாதராய் நிற்கும் அம்மையின் வலக்கை நீலோத்பலம் கொள்ள, இடக்கை நெகிழ்ந்துள்ளது. விமானக் கீழ்த்தளக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. இரண்டு கற்றளிகளுமே பிற்பாண்டியர் கல்வெட்டுகள் பெற்றுள்ளன.


சுற்றுவெளியில் இருந்து குடைவரைக்குத் தொடங்கும் படிக்கட்டுகள் இரண்டு பிரிவுகளாக உள்ளன. தெற்கு நோக்கும் முதல் பிரிவில் நான்கு படிகளும் அடுத்து ஒரு சதுரத் தளமும் தொடர்ந்து மேற்கு நோக்கி ஐந்து படிகளும் என அமைந்திருக்கும் படித்தொடரின் படியடுக்குகளைத் துளைக்கைப் பிடிச்சுவர்கள் அணைத்துள்ளன. வாயிலை ஒட்டியுள்ள கிழக்குச் சுவரின் கீழ்ப்புறத்தே யானையை அழித்த இறைவன் சிற்பமாகி உள்ளார். எதிரே பூட்டப்பட்ட சிறிய அறை.

நிலைக்கால்களும் மேல், கீழ் நிலைகளும் பெற்றுள்ள குடைவரை வளாக வாயிலைப் பக்கத்திற்கொன்றாக உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. அவை உத்திரம், வாஜனம் தாங்க, மேலே சதுரப்பட்டியுடன் கூரை. பக்கச்சுவர்களில் வலப்புறம் சங்கநிதி. இடப்புறம் தாமரைநிதி. அவற்றிற்குக் கீழே இருபுறமும் கவரிக் காரிகையர் பக்கத்திற்கொருவராய் நிற்கின்றனர்.


படித்தொடர் மேற்றள முற்பகுதியில் நிற்கும் இரண்டு கனமான தூண்கள் முச்சதுர, இருகட்டு உடலின. கட்டுகள் வளைப்பட்டை பெற, கீழ், நடுச்சதுரங்களில் சிற்பங்கள். மேற்சதுரங்கள் வெறுமையாக உள்ளன. போதிகைகள் பூமொட்டுக் காட்ட, மேலே கூரையுறுப்புகள். இது போலவே முதற் படித்தொடர் முடியும் தளத்திலும் இரண்டு தூண்கள் உள்ளன.
சுற்றுவெளியில் தொடங்கும் இரண்டாம் படித்தொடரின் முகப்பு உபானம், துணைஉபானம், தாமரை ஜகதி, மேல் நோக்குத் தாமரைவரி, கம்பு, பெருங்கம்பு, மேல்நோக்குத் தாமரை வரி, கம்புகள் தழுவிய பாதங்கள் பெற்ற கண்டம், கீழ்நோக்குத் தாமரைவரி, கம்பு, மேல்நோக்குத் தாமரைவரி, கம்புகள் தழுவிய பாதங்கள் பெற்ற பெருங்கண்டம், கீழ்நோக்குத் தாமரைவரி, இரண்டு கூடுவளைவுகள் பெற்ற கபோதம், பூமிதேசம் எனப் பல்லுறுப்புகள் பெற்ற கபோதபந்தத் துணைத்தளமாக அழகுபடுத்தப்பட்டுள்ளது. கிழக்கில் இத்தளத்தின் மேல் நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர் எழுப்பப்பெற்று மலைச்சரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றிருக்கும் கோமுகம் வழியே குடைவரைக் கருவறையின் முழுக்காட்டு நீர் வெளியேறுகிறது.
கருவறையும் முகப்பும் பெற்ற மண்டபக் குடைவரையாக அமைந்துள்ள பழைய வளாகத்தைப் புதிய வளாகத்துடன் நன்கு இணைத்துள்ளனர். வடக்குப் பார்வையாக உள்ள முகப்பின் முன்புறத்தே நெடுக தரையமைத்து, குடைவரைக் காலப் படியமைப்பை மூடியவர்கள், குடைவரைக் கபோதத்தையும் முன்வளாகச் சுவருடன் இணைத்துக் கூரையமைத்துள்ளனர். முன் தரையால் மறைக்கப்பட்டுள்ள கீழ்ப்பகுதிக்குச் செல்ல, தரையமைப்பில் விடப்பட்டுள்ள இடம் பாறையால் தற்காலிக அடைப்புப் பெற்றுள்ளது. அதன் வழிக் கீழிறங்கினால் குடைவரைக் காலப் படியமைப்பை ஒட்டிக் காணப்படும் இரண்டு கல்வெட்டுகளைப் பார்ப்பதுடன், குடைவரை முகப்பை அடுத்து விரியும் மேற்குப் பாறைச்சுவரில் தொடங்கும் பாண்டியர் கல்வெட்டின் கீழ்ப்பகுதியையும் பெறலாம்.
கிழக்கு மேற்காக 5. 77 மீ. நீளமும் தென்வடலாக 74 செ. மீ. அகலமும் பெற்றமைந்துள்ள முகப்பில் நான்முகமாக அமைந் துள்ள இரண்டு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் இடம்பெற்றுள்ளன. பக்கப் பாறைச்சுவர்களை ஒட்டி அமைந்துள்ள அரைத்தூண்கள் மேற்பகுதியில் வளையத் தொங்கலும் மூன்று பட்டிகளாலான வடிப்பற்ற கட்டும் பெற்றுள்ளன. இப்பட்டிகளில் நடுப்பட்டி சற்றுப் பிதுங்கியுள்ளது. கட்டுக்கு மேல் வாயகன்ற கலசம் அமைய, மேலே போதிகை. அதே வடிப்புகளுடன் உள்ள முழுத்தூண்கள் வளையத்தொங்கலைத் தொடர்ந்து மிக நீளமான மாலையமைப்புப் பெற்றுள்ளன. ஆழமற்ற வடிப்பான இம்மாலை தூணுடலின் மூன்றில் இருபகுதிகளில் காணப்படுகிறது.


போதிகைகள் பட்டை பெற்ற விரிகோணத் தரங்கக் கைகளால் தாங்கும் உத்திரம் போதிகைகளைவிட அகலமாகவும் ஆனால், உயரக் குறைவாகவும் உள்ளது. உத்திரத்தின் மேல் விளிம்பொட்டி நீளும் வாஜனம், முகப்படுத்து முன்னோக்கி விரியும் 1. 13 மீ. அகல மேற்குச் சுவரிலோ அல்லது 98 செ. மீ. அகலக் கிழக்குச் சுவரிலோ இடம்பெறவில்லை. வாஜனத்தை அடுத்து நீளும் கூரை, கபோதமாய் வளைந்து இறங்கி முன்சுவர்க் கூரையுடன் இணைகிறது. முகப்பை அடுத்து விரியும் பக்கச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.


கிழக்கு மேற்காக 5. 77 மீ. நீளமும் தென்வடலாக 3. 89 மீ. அகலமும் 2. 86 மீ. உயரமும் பெற்றுள்ள மண்டபத்தின் கிழக்குச் சுவர் வெறுமையாக உள்ளது. மேலே கூரையை ஒட்டி வாஜனம். தெற்குச் சுவரின் மேற்குப்பகுதியில் காணப்படும் 1. 74 மீ. உயரம், 1. 33 மீ. அகலம், 13. 5 செ. மீ. ஆழம் பெற்ற கோட்டத்தின் கீழ்த்தளம் போல, மண்டபத் தரையிலிருந்து 69 செ. மீ. உயர, அகலக் குறைவான தளம் ஒன்று 2. 11 மீ. நீளத்திற்கு வெட்டப்பட்டுள்ளது. இத்தளமுகப்பில் கிழக்கில் ஆடும், மேற்கில் மயிலும் அமைய, இடையில் பூச்சாடி.

கோட்டத்தில் நடுநாயகமாக முருகனும் வலப்புறம் அவருக்குக் குடைபிடிக்கும் பூதமும் இடப்புறம் கைக்கட்டிப் பணிவு காட்டும் பத்திமையாளர் ஒருவரும் சிற்பங் களாகியுள்ளனர். உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள கோட்டத்தின் மேற்பகுதியில் மெல்லிய உத்திரமொன்றும் மேலே கூடுகளற்ற கபோதமும் காட்டப்பட்டுள்ளன. கூரையை ஒட்டிய வாஜனம் தெற்குச் சுவர் முழுவதற்குமாய் அமைந்துள்ளது.


மண்டபத்தின் வடபுறம் உள்ள முகப்பின் தெற்கு முகத்தில் உத்திரம், வாஜனம் அமைய, அதையடுத்து 8 செ. மீ. கனத்தில் 71 செ. மீ. அகலத்தில் கிழக்கு மேற்காக கூரையை ஒட்டி அதன் முழு நீளத்திற்கும் விரியும் பலகை அமைப்பு, தெற்கில் கருவறையின் வடக்குச் சுவரையொட்டிய அளவில் முடிகிறது. மேற்குச் சுவரில் வாஜனம் இல்லை. மண்டபத்தின் கிழக்குச் சுவரில் கிழக்கு அரைத்தூணையொட்டிக் கூரையிலிருந்து தரைவரை இறங்கும் சதுரப்பட்டி மேற்குச் சுவரில் இடம்பெறவில்லை.
மேற்குச் சுவரிலிருந்து மண்டபத்திற்குள் 98 செ. மீ. பிதுக்கமாகக் காட்டப்பட்டுள்ள கருவறையின் முன் பிற்கால இணைப்பாய் உள்ள தளம் உபானம், கம்பு, மேல்நோக்குத் தாமரைவரி, பாதங்கள் பெற்ற கம்புகள் தழுவிய கண்டம், கீழ்நோக்குத் தாமரைவரி, கபோதம், கம்பு இவற்றை உறுப்புகளாகப் பெற்ற துணைத்தளமாய் அமைந்துள்ளது. 76 செ. மீ. உயரம், 3. 14 மீ. நீளம், 1. 61 மீ. அகலம் பெற்றுள்ள இத்தளத்தின் வடபுறத்தே இரண்டு படிகள் உள்ளன.


மேடையில் தென்சுவர் அருகே இலலிதாசனத்திலுள்ள பிள்ளையார் பின்கைகளில் பாசம், அங்குசம் பெற்றுக் கரண்ட மகுடத்துடன் இடம்புரியாக முப்புரிநூலுடன் உள்ளார். முன் கைகளில் வலக்கை மோதகம் ஏந்த, இடக்கை இடமுழங்கால் மேல் உள்ளது. வலத்தந்தம் உடைந்திருக்க, இடத்தந்தம் முழுமையாக உள்ளது. உதரபந்தம், பட்டாடை பெற்றுள்ள அவரது கழுத்திலிருந்து பதக்கத்துடன் இறங்கும் நீளமாலை வயிற்றில் தவழ்கிறது.


1. 74
மீ. உயரம், 91 செ. மீ. அகலம் பெற்றுள்ள கருவறை வாயிலையொட்டி நிலைக்கால்கள் போலப் பக்கத்திற்கு ஒன்றாய்க் காட்டப்பட்டிருக்கும் உறுப்பு வேறுபாடற்ற அரைத்தூண்களின் மேல் உள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் அகலமான உத்திரம், மெல்லிய வாஜனம் தாங்க, மேலே கூரை. கருவறை முன்சுவர் வடபுறத்தே மேற்குச் சுவராய்த் திரும்பும் இடத்தில் மற்றோர் அரைத்தூண் காட்டப்பட்டுள்ளது. தென்புறத்தும் முன்சுவர் மண்டபத் தெற்குச் சுவரைத் தொடுமிடத்திற்கு 37 செ. மீ. முன் அமையுமாறு ஓர் அரைத்தூண் உள்ளது.


வாயிலின் இருபுறத்தும் அமைந்துள்ள நிலைத்தூண்களுக்கும் தள்ளியமைந்துள்ள இவ்வரைத்தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்ப்பகுதி இருபுறத்தும் கோட்டங்களாகியுள்ளது. தென்கோட்டம் 1. 74 மீ. உயரத்தில் 40 செ. மீ. அகலம் பெற்றமைய, வடகோட்டம் 1. 75 மீ. உயரத்தில் 43 செ. மீ. அகலம் பெற்றுள்ளது. இக்கோட்டங்களின் கீழ்ப்பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாகச் சிறிய அளவிலான பூதங்கள் கருவறைக்காய்த் திரும்பிய ஒருக்கணிப்பு நிலையில் காட்டப்பட்டுள்ளன.


கருவறையின் வடசுவர் அதன் கிழக்கு, மேற்கு ஓரங்களில் உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்களைப் பெற்றுள்ளது. அவற்றுள் கிழக்குத் தூண் மேலுள்ள போதிகை வடக்கு, மேற்கு இருதிசைகளிலும் தரங்கக் கைகளை விரிகோணத்தில் விரித்து உத்திரம் தாங்க, மேற்குத் தூண் போதிகை கிழக்கில் மட்டுமே கைவிரித்துள்ளது. மேலே உத்திரம், வாஜனம். கருவறையின் வடசுவருக்கும் முகப்பிற்கும் இடையில் உள்ள 78 செ. மீ. அகல மண்டப மேற்குச் சுவர் வெறுமையாக உள்ளது.
தென்வடலாக 1. 43 மீ. நீளம், கிழக்கு மேற்காக 1 மீ. அகலம், 1. 97 மீ. உயரம் கொண்டமைந்துள்ள கருவறையின் தென், வடசுவர்களும் கிழக்குச் சுவரும் வெறுமையாக உள்ளன. கூரையும் தரையும் நன்கு உருவாகியுள்ளன. கருவறைப் பின்சுவரை ஒட்டிக் காணப்படும் 74 செ. மீ. உயரத் தளம் தரையிலிருந்து 25 செ. மீ. உயரத்தில் ஒரு படி போல அமைந்து, பின் 49 செ. மீ. உயரம் பெற்ற தளமாக 30 செ. மீ. அகலத்தில் 1. 38 மீ. நீளத்திற்கு விரிந்துள்ளது.


இம்மேற்றளத்தில்தான் கிழக்குப் பார்வையாகத் தென்புறம் சிவபெருமானும் வடபுறம் உமையன்னையும் உள்ளனர். அவர்தம் தலைக்கு மேலும் பக்கங்களிலும் உள்ள சுவர்ப்பகுதியில் திரைச்சீலை கட்டினாற் போல் மேலே ஆறு தொங்கல் மடிப்புகளும் பக்கங்களில் சுருட்டிய திரைச்சீலைத் தொகுப்பும் சுதையால் காட்டப்பட்டுள்ளன. படிகளின் முகப்பில் உபானம், கீழ்நோக்குத் தாமரைவரி, கம்புகள் தழுவிய பாதங்களுடனான கண்டம், மேல்நோக்குத் தாமரைவரி, பெருங்கம்பு ஆகியன பெற்ற துணைத்தள வடிப்பு உள்ளது.


மண்டபத் தெற்குக் கோட்டத்தில் காட்டப்பட்டுள்ள முருகன் இலேசான வலச்சாய்வில் சமபாத நிலையில் மெல்லிய தளமொன்றின்மீது நிற்கிறார். வலக்கை தொடைமீது தவழ, இடக்கை இடுப்பில் உள்ளது. கிரீடமகுடம், அதை மீறி வலப்புறம் நெகிழும் குழல்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், நிவீதமாய் முப்புரிநூல், இருகால் களையும் தழுவி அணியப்பட்ட பட்டாடை, இடுப்பையும் தொடைகளையும் தழுவி இடப்புறம் முடிச்சிடப்பட்ட இடைக்கட்டு, சவடி, பதக்கம் பெற்ற முத்துமாலை, பதக்கம் பெற்ற நீள்மாலை எனத் திகழும் முருகனின் வலப்புறம், தலையை நிமிர்த்தி இறைவனை நோக்கிய கோலத்தில் இரண்டு கைகளாலும் குடை ஒன்றைப் பிடித்தவாறு8 தனித்தளம் ஒன்றில் நிற்கும் பூதம் உதரபந்தம் பெற்றுள்ளது. மரமேறுவார் போல் இடையாடையும் சுருள்முடியும் பாடகங்களும் குதம்பைகளும் கொண்டுள்ள அதன் வயிறு சம்பந்தரின் பாடலடியை நினைவுபடுத்துகிறது.


பூதத்தின் தலைக்கு மேல் வளரும் கொடித்தண்டு உருளைத் தூண் உடலும் அதற்கான உருளைத் தலையுறுப்புகளும் பெற்றுப் பலகையின் மேல் சேவலைப் பெற்று முடிகிறது. முருகனுக்காய்த் திரும்பியுள்ள அச்சேவல், மதுரை யானைமலைக் கந்தன் குடைவரைச் சேவலை நினைவூட்டுகிறது. முருகனின் இடப்புறம் உள்ள கைக்கட்டிப் பத்திமையாளர் சமபாதத்தில் அடக்கத்துடன் காட்சிதருகிறார். சடைப்பாரம், கால்களைத் தழுவிய பட்டாடை, முருகனைப் போலவே அணியப்பெற்ற இடைக்கட்டு, தோள், கை வளைகள், இரண்டு கழுத்தணிகள், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல் பெற்றுள்ள அவரது முகம் குழந்தையின் முகம் போல வடிக்கப்பட்டுள்ளது.


கருவறை முன்சுவர்க் கோட்டங்களுள் தென்புறம் உள்ள பூதம் இரண்டு கைகளிலும் உருள்பெருந்தடி ஒன்றைத் தலை கீழாகப் பிடித்துள்ளது. மரமேறி ஆடை அணிந்துள்ள அதன் சுருண்டு படர்ந்த தலைமுடியைக் கட்டுக்குள் வைக்குமாறு துணிப்பட்டை ஒன்று தலையைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், கழுத்தணிகள், பாடகம், முப்புரிநூல், உதரபந்தம் பெற்றுள்ள அப்பூதம் கருவறை நோக்கிக் கால்களை இருத்தியவாறு வாயில் நோக்கிய ஒருக்கணிப்பில் உள்ளது.


வலக்கையில் பூவேந்தியிருக்கும் வடபூதம், இடக்கையை இடுப்பில் கொண்டுள்ளது. ஆடை தென்பூதத்தைப் போல் அமைய, தலையில் சுருள்முடி. முப்புரிநூல், பதக்கமாலை, குதம்பை பெற்றுள்ள அதன் இடுப்பில் உதரபந்தம் போலக் கட்டப்பட்டுள்ள துணிப்பட்டையின் முடிச்சு வலப்புறம் நெகிழ்ந்துள்ளது.


கிரீடமகுடம் பெற்றுள்ள இறைவனும் இறைவியும் உத்குடியாசனத்தில் உள்ளனர். இறைவன் இடக்காலைத் தளத்தின்மீது குத்துக்காலாக்கி, வலக்காலைக் கீழிறக்கிப் பாதத்தைப் படியில் இருத்தியுள்ளார். இறைவி வலக்காலைக் குத்துக்காலாக்கி இடக்காலைக் கீழிறக்கிப் பாதத்தைப் படியில் வைத்துள்ளார். இறைவனின் இரு கைகளுள் வலக்கை தொடைமீது இருக்க, இடக்கை இறைவியின் வலக்கையைப் பற்றி யுள்ளது. இறைவியின் இடக்கை தளத்தில் ஊன்றியுள்ளது.


வலச்செவியில் மகரகுண்டலமும் இடச்செவியில் குதம்பையும் அணிந்துள்ள இறைவனின் மார்பில் சவடி, பதக்கம் பெற்ற சிறிய, பெரிய மாலைகள் தவழக் கையில் தோள், கை வளைகள். முப்புரிநூல், உதரபந்தம், கால்களைத் தழுவிய பட்டாடை, பாடகம் அணிந்துள்ள இறைவனின் தோள்களில் குழல் கற்றைகள் படர்ந்துள்ளன. நேர்ப்பார்வையாய் அமர்ந்திருக்கும் அவரது இடப்பாதம் திரயச்ரமாக உள்ளது.


தலைச்சக்கரம், குதம்பை, தாலி, பதக்கமாலை, வயிற்றை வருடும் பெரும் பதக்கமாலை, தோள், கை வளைகள் முப்புரிநூல் பெற்றுள்ள இறைவியின் மார்பகங்களை மெல்லிய கச்சு மறைத்துள்ளது.16 இருவருக்கும் இடையாடை விரிவு தளத்தில் படருமாறு காட்டியுள்ளனர்.
மலையின் மேற்பகுதியில் அமைந்துள்ள இரண்டு இயற்கையான குகைத்தளங்களும் சமணத் துறவிகளின் வாழிடங்களாக இருந்துள்ளமையை அங்குள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகள் நிறுவுகின்றன. இரண்டனுள் கிழக்கில் உள்ளதில் படுக்கைகள் தெளிவாக அமையவில்லை. பாறையின் மேற்பகுதியில் நீர்வடி விளிம்பிற்கு நன்கு கீழ் இருக்குமாறு, ‘எருகாடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்’ என்ற பழந் தமிழ்க் கல்வெட்டு இரண்டு வரிகளில் இன்றும் படிக்குமாறு தெளிவாக உள்ளது. கி. பி. முதல் நூற்றாண்டுக் கல்வெட்டாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இதை மறைக்குமாறு வரலாற்று உணர்வற்ற சிலர் தங்கள் பெயர்களையும் தலைப்பெழுத்துக்களையும் வண்ணம், உளி இவற்றால் பதிவு செய்துள்ளனர்.


மேற்குக் குகைத்தளத்தில் வரிசையாகப் படுக்கைகளைக் காணமுடிந்தாலும் மாங்குளம், பரங்குன்றம், யானைமலை போல் தெளிவான வரையறைகள் இல்லை. தலையணை அமைப்பும் இல்லை. குகைத்தள மேற்பாறையில் வெட்டப்பட்டிருந்த பழந்தமிழ்க் கல்வெட்டில், ‘வ கரண்டை’ என்ற சொல் மட்டுமே எஞ்சியுள்ளது. கி. மு. முதல் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் இக்கல்வெட்டும் நீர்வடி விளிம்பிற்குக் கீழ் இருக்குமாறு வெட்டப்பட்டுள்ளது.


குகைத்தளங்களுக்குச் செல்லும் வழியில் உள்ள சில பாறைகளில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. விலங்கொன்றின் மேல் அமர்ந்துள்ள மனிதர், தனித்து நிற்கும் மனிதர்கள் என ஆங்காங்கே சில ஓவியங்களை இனம் காணமுடிகிறது. சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ள இவ்வோவியங்களுள் பெரும்பான்மையன சரியான பராமரிப்பின்மையால் முற்றிலும் அழிந்துவிட்டன. ஓவியங்கள் வரையப்பட்டுள்ள பாறைகளுக்குச் செல்லும் வழியில் சதுரமான கட்டுத்தளம் ஒன்றும் முனீசுவரனாக வணங்கப்படும் பாறை ஒன்றும் உள்ளன.


திருமலையின் உச்சிக்குச் செல்பவர்கள் சுற்றிலும் பரந்து கிடக்கும் பசுமை நிறை வயல்களையும் கோயிலின் முன்னுள்ள நீர் நிறைந்த குளத்தையும் மலைக்கொழுந்தீசுவரர் கோயில் வளாகத்தையும் ஒரு பறவைப் பார்வையில் கண்டு மகிழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *