கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர்
அருள்மிகு கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435- 2460760.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கம்பகரேசுவரர், நடுக்கம் தீர்த்த நாயகன் | |
அம்மன் | – | தர்மசம்பர்த்தினி, அறம் வளர்த்த நாயகி | |
தல விருட்சம் | – | வில்வமரம் | |
தீர்த்தம் | – | சரபதீர்த்தம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்புவனேசுரம் | |
ஊர் | – | திருப்புவனம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வரகுணபாண்டியன் என்ற மன்னன் போருக்குச் செல்கிறான். அவனின் குதிரை வேகமாகச் செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர, குதிரையின் வேகத்தை அடக்குவதற்குள் குதிரை காலில் விழுந்து விதிப்பயனால் அந்த அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுணபாண்டியனை பிடிக்கிறது.
அதாவது பிரம்மகத்தி தோசம் பிடிக்கிறது. அது நீங்க, திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த பிரம்மகத்தி தோசமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட்ட வரகுணபாண்டியன் தனது தோசம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேசுவரர் போக்குகிறார்.
மன்னனுக்கு ஏற்பட்ட நடுக்கத்தை தீர்த்ததால் “நடுக்கம் தீர்த்த நாயகர்” என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
சிவன், விஷ்ணு, காளி(பிரத்யங்காரா தேவி), துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம்தான் சரபேசர்.
ஹிரண்யனை வதம் செய்த நரசிம்மசுவாமி அந்த உதிரம் தன் உடலில் இருப்பதால் ஆக்ரோஷமும் அகங்காரமும் அடைகிறார். நரசிம்மரின் துளி ரத்தம் பூமியில் பட்டால் ஆயிரம் தீவினை செய்யக் கூடிய குழந்தைகள் தோன்றும் அபாயம் ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் உடம்பு ஆதலால் அமிர்தம் கலந்துள்ள அந்த குழந்தைகளை அழிக்க முடியாது. இந்த சிக்கலைத் தீர்க்க சிவபெருமானால் மட்டுமே முடியும் என்பதால் தேவர்கள் அவரிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் சிவபெருமான் பறவை ரூபம் எடுக்கிறார். அதற்கு யாழி முகம், மனித உடம்பு, எட்டுக் கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள். அந்த நரசிம்மத்தை தன் இரண்டு கால்களால் ஆகாயத்தில் துரத்தி சென்று காற்று மண்டலத்திற்கு சென்று (பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு அப்பாற்பட்டு சென்று) தனது வஜ்ரத்தால்(நகத்தால்) நரசிம்மத்தை அமுக்க அசுர ரத்தங்கள் பீறிட்டு வெளியேறி பூமியில் விழாது காற்றோடு கலக்கிறது.
அசுர ரத்தம் வெளியானவுடன் நரசிம்மர் சாந்தமடைந்து சிவபெருமானை வழிபடுகிறார். அந்த காட்சி இங்குள்ள சரபேசர் மூலம் காணலாம். நான்கு பெரிய தெய்வங்களும் ஒன்றாக இருப்பதால் நான்கும் சேர்ந்த அருள் கிடைக்கிறது. சுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன். அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.
தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன் , சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம்.
அம்பாளுக்கு நான்கு கைகள், அட்ச மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் பீடம் மேலே நான்கு மூலை உள்ள ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.
இராமாயண மகாபாரதக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் கோயில் முழுக்க நிறைந்து காணப்படுகிறது.
இராஜராஜசோழன் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது. அதனால்தான் என்னவோ தஞ்சை பெரியகோயிலின் வடிவத்தை போலவே இக்கோயில் உள்ளது.
பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது.
தருமபுரம் ஆதீனத்தின் மேற்பார்வையில் நடந்து வரும் கோயில். சரப தீர்த்தம் உட்பட ஒன்பது தீர்த்தங்கள் உள்ள கோயில் இது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
திருவிழா:
பங்குனி உத்திரம் – பிரம்மோற்சவம் -18 நாட்கள் திருவிழா சரப உற்சவம் – பங்குனி பிரம்மோற்சவம் முடிந்தவுடன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சரப உற்சவம் நடைபெறும். அன்று ஏக தின அர்ச்சனை நடக்கும்.அன்று இரவு சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடு – திருவீதி உலா.
சரபேசர் சிறப்பு பூஜைகள் : வெள்ளி , சனி, ஞாயிறு, அஷ்டமி, பவுர்ணமி ஆகிய 5 நாட்களின் போதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.தவிர தினமும் சரப ஹோமம் (பெரிய பூஜை)நடக்கும் முருகனுக்கு கார்த்திகை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கும் சங்கட சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். நவராத்திரி, சிவராத்திரி அன்று கோயிலிலின் விசேச நாட்கள் ஆகும். பவுர்ணமி திருவீதி வலம் இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெறும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
வேண்டுகோள்:
சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.
சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.
நேர்த்திக்கடன்:
சரபேசருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்கிறார்கள். அபிசேகம், பூஜை சகஸ்ரநாம அர்ச்சனை, யாகம் ஆகியவற்றை செய்கிறார்கள். வஸ்திரம் சாத்துகிறார்கள். சரப யாகம் செய்கிறார்கள். சரபேசருக்கு சந்தனகாப்பு சாத்துகிறார்கள். செவ்வரளிப்பூ, மரிக்கொழுந்து, வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நேர்த்திகடனாக உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சரபேசருக்கு தயிர் அபிசேகம்(வியாதி நீக்கம்) பால் அபிசேகம்(ஆயுள் விருத்தி) ஆகியவை செய்வதும் பக்தர்களது நேர்த்திகடனாக உள்ளது. பால் , தயிர், இளநீர் , எண்ணெய் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம். சுவாமிக்கு ருத்ராபிசேகமும் செய்கிறார்கள். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.
Leave a Reply