பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்), நல்லூர்
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்), நல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்
காலை 7.30 முதல் 12 மணிவரையிலும் மாலை 5.30 முதல் 8 மணிவரையிலும் இத்தல இறைவனை தரிசிக்கலாம்.
இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சியைக் காண உலகத்திலுள்ள அனைத்து சீவராசிகளும் திரண்டு வடக்கே சென்றனர். இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. உலகைச் சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தனக்கு திருமண காட்சி காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம், ”நான் உனக்கு திருமணகாட்சி அருளுகிறேன்” என்றார் சிவன். இதன்படி அந்த காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு இலிங்கத்தை வைத்துப் பூஜித்து பேறுபெற்றார். அன்று அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.
மாசி மகத்திற்காக கும்பகோண மகாகுளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நல்லூரில் உள்ள குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் தொற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி, நாரதரிடம் யோசனை கேட்க, ஏழு கடல்களில் சென்று நீராடினால் தோஷம் நீங்கும் என்கிறார். நான் பெண், என்னால் எப்படி ஏழுகடல்களில் சென்று நீராட முடியும், எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்கிறாள் குந்தி.
அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று கல்யாணசுந்தரேஸ்வரரை வழிபடு, அதற்குள் நான் வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். குந்தி சாமி கும்பிட்டு வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழுகடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார். மகம் நட்சத்திரக்காரரான குந்தி தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் மூழ்கி தோஷம் நீங்கப் பெறுகிறார். ஆக மகம் நட்சத்திரத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும், இந்த குளத்தில் நீராடினால் கும்பகோண மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் எனவும் புராணங்கள்கூறுகின்றன. இங்குள்ள இலிங்கம் தினமும் 5 முறை நிறம் மாறுவது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். முதலில் தாமிர நிறம், அடுத்து இளம் சிவப்பு, அடுத்து உருக்கிய தங்க நிறம், இதையடுத்து நவரத்தின பச்சை, பிறகு இன்ன நிறமென்றே கூற முடியாத ஒரு தோற்றத்தில் காட்சிதருகிறார். எனவே இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என கூறப்படுகிறார்.
அம்பாள் திரிபுரசுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். இது தவிர எட்டு கரங்களுடன் ஆடும் நடராஜர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், அகத்தியர், காசி விஸ்வநாதர், கணநாதர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இத் தலத்தில்தான் சிவபெருமான் திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப்போல சடாரி வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
எட்டு கைகளுடன் கூடிய காளியின் சிலை இங்கு உள்ளது. கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக இந்த சன்னதிக்கு வந்து வளைகாப்பு விழாவை நடத்தி செல்கிறார்கள். மேலும் சந்தனக்காப்பு, முடி காணிக்கை கொடுத்து நினைத்த காரியம் நிறைவேற வேண்டிச் செல்கிறார்கள்.
இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தமூர்த்தி வடிவம் திருவாரூர் தியாகராஜருக்கு ஈடாக உள்ளது. இதற்கு ஒரு விசேஷமும் உண்டு. மாசி மகத்தின்போது, இந்த பெருமான், கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இறங்கும்போது அடியார்கள் சோமாஸ்கந்தருக்கு வெண்சாமரமும், விசிறியும் கொண்டு வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமானின் முகத்தில் வியர்வைத்துளிகள் அரும்புவதை காணலாம். தற்போது இந்த விழா நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு அக்னி, நாககன்னி, தர்மம், தேவம், பிரம்மகுண்டம், ஐராவதம், சந்திரன், சூரியன், காவிரி தீர்த்தங்கள் உள்ளன. இக்கோயிலில் உள்ள வில்வமரத்தை ‘ஆதிமரம்‘ என அழைக்கின்றனர். இதுவே தலமரம். முதன் முதலாக தோன்றிய வில்வமரம் இதுதான் என்பது நம்பிக்கை. இந்த வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இத்தலத்தில் மேற்கு கோபுரவாயிலின் மேற்புறம் பலிபீட வடிவில் இருக்கும் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும் காசியிலும் மட்டுமே கணநாதரை வைத்து வழிபடுகின்றனர். ஆண்டுக்கொரு முறை இரவில் நடக்கும் ‘கணநாதர் பூஜை‘ என்ற வழிபாடு சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும் பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து பூஜையை சிறப்பிக்கின்றனர்.
வழிகாட்டி:
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட இந்த கோயில். தஞ்சாவூர் – கும்பகோணம் ரோட்டில் பாபநாசத்திற்கு கிழக்கே 3கி.மீ., தொலைவில், வாழைப்பழக்கடை என்ற கிராமத்தின் அருகில் உள்ளது.
Leave a Reply