காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், ஆறகழூர்
அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், ஆறகழூர், சேலம் மாவட்டம்.
+91- 94430 24649
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காயநிர்மாலேஸ்வரர் , காமநாதீஸ்வரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தல விருட்சம் | – | மகிழம் | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | அகழியூர் | |
ஊர் | – | ஆறகழூர் | |
மாவட்டம் | – | சேலம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த இலிங்கம் மண்ணில் புதைந்தது.
பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.
சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் அருளும் தெட்சிணாமூர்த்தி, இக்கோயிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர் கோஷ்டத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். தனி விமானமும் உள்ளது. நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு அருகே இந்த 6 சீடர்களும் உபதேசம் பெறும் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், மற்ற 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் இக்கோலம் மிகவும் விசேஷமானதாகும். இந்த சீடர்கள் யாரென்பதை அறிய முடியவில்லை.
இத்தலத்திற்கு வெளியே “தலையாட்டி பிள்ளையார்” சன்னதி உள்ளது. மன்னன் கோயிலை கட்டியபோது இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டுத்தான் பணியை துவங்கினான். இவரே கோயிலுக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து “பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?” என்று கேட்டான் மன்னன். அதற்கு இவர், “நன்றாகவே கட்டியிருக்கிறாய்” என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு “தலையாட்டி பிள்ளையார்” என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.
இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை “காயநிர்மாலேஸ்வரர்” என்கின்றனர். “காயம்” என்றால் உடல், “நிர்மலம்” என்றால் பரிசுத்தம் என்று பொருள். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்டநதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு எனப் பல நதிகள் இருந்தன. இதனால் “ஆற்றூர்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் “ஆத்தூர்” என்று மருவியுள்ளது.
அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, இலிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது. தன்னை வணங்குபவர்களுக்கு முடிவிலாத ஆனந்தத்தை வழங்குவதால், சுவாமிக்கு “அனந்தேஸ்வரர்” என்ற பெயரும் உண்டு.
இத்தலவிநாயகர் மூலவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் சன்னதியின் மேல் உள்ள ராஜகோபுரம் மூன்றுநிலைகளைக் கொண்டது.
அகிலாண்டேஸ்வரி அம்பாள் சுவாமிக்கு வலது பின்புறத்தில் தனிச்சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில் ஐயப்பனுக்குத் தனி சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்னே இருபுறமும் விநாயகர் சன்னதி உள்ளது.
விநாயகர் தன் தம்பியான ஐயப்பனை தன் நிழல் வடிவிலும் காப்பதாக கூறப்படுவதால் இரண்டு விநாயகர் சன்னதி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
திருவிழா:
சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், குருபெயர்ச்சி, சிவராத்திரி.
கோரிக்கைகள்:
புதிய செயல்களை தொடங்கும் முன்பு தலையாட்டி பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply