அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்
அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்-626 130, விருதுநகர் மாவட்டம்.
+91- 94426 65443 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்) |
தாயார் | – | செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி) |
தீர்த்தம் | – | பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி |
ஆகமம் | – | வைகானஸம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருத்தங்கல் |
மாவட்டம் | – | விருதுநகர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,”மற்ற தேவிகளைக்காட்டிலும் எங்கள் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். இவளே அதிர்ஷ்ட தேவதை. இவளே மகாலட்சுமி(ஸ்ரீ)என்று அழைக்கப்படுபவள். தேவர்களின் தலைவன் இந்திரன் இவளால்தான் பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு. பெருமாள் இவளை தன் வலது மார்பில் தாங்குகிறார்” என்று புகழ்பாடினர். பூமாதேவியின் தோழியரோ,”இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமிதேவியே. அவள் மிகவும் சாந்தமானவள். பொறுமை நிறைந்தவள். பொறுமைசாலிகளை வெல்வது அரிது. இவளைக்காப்பதற்காகவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார். அப்படியெனில் இவளது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று பாராட்டினர்.
நீளாதேவியின் தோழிகள்,”எங்கள் நீளாதேவி தண்ணீர் தேவதையாக இருக்கிறாள். தண்ணீரை “நாரம்” என்பர். இதனால் தான் பெருமாளுக்கு “நாராயணன்” என்ற சிறப்பு திருநாமமே ஏற்பட்டது. உலகிலுள்ள எல்லாரும் உச்சரிக்கும் நாமம் நாராயணன் நாமம். தண்ணீரைப் பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்கச்செய்து, தாங்குபவள் எங்கள் நீளாதேவி. எனவே இவளே உயர்ந்தவள்” என்றனர். விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்தபாடில்லை. எனவே ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால் இத்தலம் “திருத்தங்கல்” என்ற பெயர் ஏற்பட்டது.
திருத்தங்கல் பெருமாள் கோயில் “தங்காலமலை” மீது அமைந்துள்ளது. மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான “நின்ற நாராயணப்பெருமாள்” மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு. இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு. இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியன தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவிலைப்போல் இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.
மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தனது தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி ஓவியமாக வரையக்கூறினாள். ஓவியம் வரைந்த பிறகு தான், அந்த வாலிபன் பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம்பிடித்தாள். சித்ரலேகை துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிகொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு வாணனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்தவற்றை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான். அப்போது அசரீரி தோன்றி,”வாணா! இத்தம்பதிகளை கொன்றால் நீயும் அழிந்து போவாய்” என ஒலித்தது. இதைக்கேட்ட வாணன் அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின்பு முறைப்படி துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்தார். ஆனால் திருத்தங்கலில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பப்படி இத்தலத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து, நின்ற நாராயணப்பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.
சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா,”ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்” எனக் கூறினார். வருத்தமடைந்த ஆலமரம் தனது சிறப்பை உயர்த்த பெருமாளை நோக்கித் தவமிருந்தது. தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், “உனது விருப்பம் என்ன?” எனக் கேட்டார். அதற்கு ஆலமரம்,”தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீது பள்ளிகொண்டருள வேண்டும்” எனக் கேட்டது. அதற்கு பெருமாள்,”திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக. நான் திருமகளைத் திருமணம் செய்ய வரும் காலத்தில், உன் மீது நின்றும், பள்ளிகொண்டும் அருள்பாலிப்பேன்” என்றார். மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், தங்கும் ஆல மலை எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை ஆனது.
காலவரிஷி முனிவரின் குமாரராகிய சிந்துமாமுனிவருக்கு பிரம்மனின் அருளால் சுகிருதி, விகிருதி என்ற புதல்விகள் பிறந்தனர். சிந்துமாமுனிவர் தன் பெண்களிடம்,”உங்களுக்கு ஏற்ற மணவாளனை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்” என்றார். சுகிருதி சூரியபகவானையும், விகிருதி சுசர்மா என்பவனையும் கணவனாகத் தேர்ந்தெடுத்தார்கள். சூரியனை கணவனாக அடைய சுகிருதி கடும் தவம் இருந்தாள். அப்போது சண்டகோஷன் என்ற அரக்கன் அவளைத் தூக்கிச் சென்றான். வருந்திய அவள், சூரியனிடம் தன்னைக் காத்தருள வேண்டி கதறினாள். சூரியன் தன் சக்திகளில் ஒன்றான சண்டசக்தியை அரக்கனை நோக்கி ஏவினார். அப்போது, அரக்கன் சுகிருதியை விட்டுவிட்டு ஒரு பிராமணர் அருகில் சென்று நின்று கொண்டான். அரக்கனை அழிக்க வந்த சண்டசக்தி பிராமணனையும் சேர்த்து அழித்து விட்டது. இதனால் சூரியனுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. வருந்திய சூரியன் பெருமாளை வேண்டினார். பெருமாள்,”ஸ்ரீ யாகிய மகாலட்சுமி தவம் செய்யும் திருத்தங்கல் தீர்த்தத்தில் நீராடினால் உனது தோஷம் நீங்கும்” என்றார். சூரியனும் அதன்படி நீராடி பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) நீங்கப் பெற்றார்.
கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும், பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை.
அனுமன், சக்கரத்தாழ்வார் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். அருணன், மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி ஆகியோர் மூலஸ்தானத்தில் உள்ளனர். இத்தலம் அமைந்துள்ள மலையிலேயே சிவன், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன. பெருமாளின் மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர். அன்னநாயகி(ஸ்ரீதேவி), அம்ருதநாயகி(பூமாதேவி), அனந்தநாயகி(நீளாதேவி), ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டாராம்.
இத்தலத்தில், தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார். தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும், பெருமாளுக்கு விசேஷ நாட்களில் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது.
ஆழ்வார்கள் இத்தல பெருமாளை திருத்தங்காலப்பன் என்ற பெயரில் தான் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 48வது தலம். பாண்டி நாட்டு திவ்ய தேசத்தில் 5வது தலம். இத்தலம் குறித்து சிலப்பதிகாரத்தில் வாத்திகன் கதையில் செய்தி இருக்கிறது. இத்தலம் 1300 ஆண்டுகள் பழமையானது. இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.
பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்
திருவிழா: வைகுண்ட ஏகாதசி
பிரார்த்தனை:
விரும்பும் வாழ்க்கைத்துணையை அடைய விரும்புபவர்கள் இத்தலத்து பெருமாளை வணங்கலாம். நான்கு தாயார்களுடன் இருக்கும் இத்தலத்தில் பெருமாளையும், தாயார்களையும் வேண்டிக் கொள்ள திருமணத்தடை உள்ளவர்களுக்கு அது நீங்கி, திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
திருமணத் தடையுள்ளவர்கள், பெருமாளுக்கு பரிவட்டம் சாத்தியும், பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புளியோதரை படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
இருப்பிடம் :
விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் திருத்தங்கல் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : விருதுநகர்
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
தங்கும் வசதி : விருதுநகர்
Leave a Reply