அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி

அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்,  நாங்குனேரி-627108, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4635-250 119 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்)
தாயார் வரமங்கை தாயார்
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சேற்றுத்தாமரை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வானமாமலை என்னும் திருவரமங்கை
ஊர் நாங்குனேரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

மது,கைடபன் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்தபோது, அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து, விஷ்ணுவின் அருள் பெற்றாள். “மாசு கழுவப்பெற்றாய்என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாகத் தல வரலாறு கூறுகிறது. இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அரசராக அமைந்திருப்பதும் இத்தலத்தில் மட்டுமே. பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடி வைத்து, எவன் தன் பாதத்தில் சரணடைகிறானோ, அவனுக்கு தன் மடியில் இடம் உண்டு என்பது போல் ஒரு கையை மடியில் வைத்திருக்கிறார். பெருமாளின் கையில் பிரத்யேக சக்கரம் உள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள்.

இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீவரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி, “இவள் நாங்குநேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள்எனக் கூறியதால் இத்தலத்திற்கு வந்து விட்டாள். மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இங்குள்ள சடாரியில் சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். நாங்குநேரியில் ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம்.

மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர்.

பாடியவர்கள்:

நம்மாழ்வார் மங்களாசாஸனம்

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே.

நம்மாழ்வார்

திருவிழா:

பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்சவம் இத்தலத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

பிரார்த்தனை:

ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல்வியாதி உள்ளவர்கள், இந்த எண்ணையை உடலில் தேய்த்து, சில சொட்டுக்கள் சாப்பிட்டால் குணமாகி விடும்.

நேர்த்திக்கடன்:

பெருமாளிடம் பிரார்த்தனை செய்பவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் கோயில் அலுவலகத்திலேயே நல்லெண்ணெய் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்து விடுவார்கள்.

வழிகாட்டி:

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து பஸ்களும் நாங்குநேரி வழியாகத்தான் செல்லும். ஊரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : வள்ளியூர்

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

தங்கும் வசதி : திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *