Category Archives: சிவ ஆலயங்கள்
நாகமல்லீஸ்வரர் திருக்கோயில், நாலூர்
அருள்மிகு நாகமல்லீஸ்வரர் திருக்கோயில், நாலூர் (மீஞ்சூர் வழி), திருவள்ளூர் மாவட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நாலூரில் இருக்கிறது மிகப்புராதனமான சிவாலயம் ஒன்று. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது.
ஆனால் கோயிலை நெருங்கின போது கண்டது முட் செடிகள், செடி, கொடி, புதர்கள் மதிலில் முளைத்த அரசமரம் என்று பெரிய புதர் ஒன்றுதான். சிறப்பும் செழிப்புமாக ஒரு காலத்தில் திகழ்ந்த கோயில். சிதைந்தும், சீரழிந்தும் கிடக்கிறது. செருப்புக்காலோடு போகக் கூடாது என்பார்கள். ஆனால் நெருஞ்சி முள் குத்துவதால் , செருப்புடன் தான் செல்லமுடியும். புதரை விலக்கி எட்டி பார்த்தால் புழுதிபடிந்த நிலையில் நாகமல்லீஸ்வரரின் இலிங்கம் உள்ளது. ஆண்டுகள் பல கடந்து விட்டன. மேனியெலாம் திருநீறுக்கு பதில் புழுதி படர்ந்திருக்கிறது.
அசுரனாக இருந்து அமுதத்தை ஏமாற்றிப் பெற்றதால், இராகுவுக்கும் கேதுவுக்கும் தோஷம் பற்றிக்கொண்டது. அதோடு காட்டிக்கொடுத்த சூரிய சந்திரனோடு பகையும் எழுந்தது. பகை விலகவும், தோஷம் தொலையவும் பல்வேறு தலங்களில் சிவனின் இலிங்க திருமேனியை அமைத்து வழிப்பட்டனர். அப்படி இத்தலம் வந்த போது இங்குள்ள தாமரைத் தடாகத்தில் நீராடிவிட்டு சிவனுக்கு ஆராதனை புரிய நினைத்தனர். அப்போது பூத்திருந்த தாமரைகளுள் ஒன்று பொன் வண்ணமாக மாறியது. வியப்புடன் அவர்கள் அதை நோக்கினர். காரணம் புரிந்தது. இறைவனையும் இறைவியையும் ஒரு சேர வழிபடுவதையும் மறந்து ஈசனை மட்டுமே பூஜிப்பதால் தான் தங்களின் தோஷம் தொலையாமல் இருப்பதாக உணர்ந்தார்கள். இராகுவும், கேதுவும், அதனால், அம்மைக்கும், அப்பனுக்கும் வடிவங்கள் அமைத்து, மல்லிகையாலும் தமரையாலும் அர்ச்சனை செய்து வணங்கினார்கள். இறைவனும், இறைவியும், பாம்பு கிரகங்களின் தோஷம் நீங்க அனுகிரகம் புரிந்தார்கள். அதோடு, “இத்தலம் வந்து எம்மை வழிபடுவோரை நீங்கள் வாட்டாமல் இருக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்கள். பாம்பு கிரகங்கள் வழிபட்ட அப்பகுதியில் பரமனுக்கும் பார்வதிக்கும் ஓர் ஆலயம் அமைந்தது. நாகங்கள் மல்லிகையால் அர்ச்சித்து வழிபட்டதால், நாகமல்லீஸ்வரர் ஆனார் ஈசன். தங்க நிறத் தாமரையில் தன் வடிவம் காட்டியதால், சொர்ணாம்பிகை ஆனாள் அம்மன்.
முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், பி.வி.களத்தூர்
அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், பி.வி.களத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 97890 49704, +91- 99624 67355
காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகரை முன்கூட்டியே தொடர்பு கொண்டால் பிற நேரங்களில் சுவாமியைத் தரிசிக்கலாம்.
மூலவர் | – | முன்குடுமீஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர் | |
அம்மன் | – | மீனாட்சி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | வில்வ தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பொன்விளைந்த களத்தூர் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பாக்கியம் வேண்டி சிவனுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தான். அவ்வாறு கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. ஒருசமயம் மன்னன் இக்கோயிலுக்கு சுவாமியைத் தரிசிக்க வந்தான். அவ்வேளையில் பூஜையை முடித்த அர்ச்சகர், சுவாமிக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவிக்குப் போட்டுவிட்டு அழகு பார்த்தார். மன்னர் வந்திருப்பதை அறிந்த அர்ச்சகர், மனைவிக்கு சூடிய மாலையைக் கோயிலுக்கு எடுத்து வந்தார். சிவனுக்கு அணிவித்த மாலை எனச் சொல்லி அதை மன்னனுக்கு அணிவித்தார். மன்னர் மாலையில் முடி இருந்த காரணத்தைக் கேட்டார். அர்ச்சகர் அவரிடம் “லிங்கத்தின் சடாமுடியில் இருந்த முடியே அது” எனப் பொய் சொல்லிவிட்டார். மன்னன் தனக்கு சிவனிடம் முடியைக் காட்டும்படி கூறினான். அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொல்லிவிட்டார். மன்னன் மறுநாள் தனக்கு அந்த தரிசனம் கிடைக்காவிட்டால், அர்ச்சகருக்கு கடும் தண்டனை கொடுக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றான். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சிவனை வேண்டினார். மறுநாள் மன்னர் வந்தார். அர்ச்சகர் பயத்துடனே சிவலிங்கத்தின் முன்பு தீபாராதனை காட்டினார். என்ன ஆச்சர்யம்! சிவலிங்க பாணத்தின் முன் பகுதியில் கொத்தாக முடி இருந்தது. மன்னனும் மகிழ்ந்தான். இவ்வாறு அர்ச்சகருக்காக முன்குடுமியுடன் காட்சி தந்ததால் இவர், “முன்குடுமீஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.