Category Archives: சிவ ஆலயங்கள்

நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில்

அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 4652- 232 420, 94439 92216

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகராஜர்
தல விருட்சம் ஓடவள்ளி
தீர்த்தம் நாகதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நாகர்கோவில்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள், ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள். அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டனர். பின்பு நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர்.

தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோயில் எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், “நாகர்கோவில்எனப் பெயர் வந்தது. தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த பெரியகோயில் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.

சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார், விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபடுகிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம். நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது. புழுதியில் சென்றாலும், நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை. அதாவது தான் எதில் இருந்தாலும், அதைத் தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது. மனிதர்களும் மனைவி, மக்கள், பொன், பொருள் என எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகிறது.

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம்

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம், விருதுநகர் மாவட்டம்.

+91 98435 46648

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி
உற்சவர் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி
அம்மன் தவமிருந்த நாயகி
தல விருட்சம் நாகலிங்க மரம்
தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் சிவஆகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தேவதானம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறைபோர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. எனவே வஞ்சகத்தால் அவனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையைப் பரிசாக கொடுத்து அனுப்பினான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவர். இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தைப் பாண்டிய மன்னன் அறிந்தான். தனக்கு பரிசாக கொடுத்தனுப்பிய நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே போர்த்தி விட்டான். சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் பாண்டியனைக் காப்பாற்றிய சிவனுக்கு, பாண்டியன் கோயில் எழுப்பினான். நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்று பெயர் சூட்டினான்.