Tag Archives: சித்தாபுதூர்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சித்தாபுதூர்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சித்தாபுதூர், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மணிகண்டன் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சித்தாபுதூர் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு, பக்தர்கள் சிலர் ஐயப்ப சுவாமியின் சிறிய படமொன்றை வைத்து பூஜித்து வந்தனர். 1968ம் வருடம் ஐயப்பன், விநாயகர், பகவதியம்மன், முருகப்பெருமான், சிவபெருமான் ஆகியோருக்கு விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபடத் துவங்கினர். 1969ம் வருடம், பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து பெரிய நீலகண்டன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கேரள பாரம்பரிய முறையில் இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் 19 வருடங்களாக மேல்சாந்தியாக இருந்த எழிக்கோடு சசிநம்பூதிரி தான் தற்போது சபரிமலை மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் செய்தி. தூய்மையுடனும், பொலிவுடனும் அமைந்துள்ளது ஆலயம், நைவேத்தியப் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு மடப்பள்ளி, நடைப்பந்தல், சுத்தமான தேக்கு மரத்தாலான சுற்றம்பலம், நமஸ்கார மண்டபம் ஆகியவை கேரள தச்சு வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
ஐயப்ப சுவாமியின் சுற்றம்பலத்தில் சுற்று விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. மாலை வேளையில், பிரகாசமாக ஒளிவீசும் விளக்குகளைக் காணக் கண்கோடி வேண்டும். தங்க கொடிமரம், தினமும் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் (கார்த்திகை துவங்கி விரத காலங்களில் தினமும் சுமார் 2,500 பேருக்கு அன்னதானம் நடைபெறுமாம்) சுதந்திரத் திருநாளில் சமபந்தி போஜனம் என அமர்க்களப்படுகிறது.