Tag Archives: உடையாபட்டி

அருள்மிகு கந்தாஸ்ரமம், உடையாபட்டி

அருள்மிகு கந்தாஸ்ரமம், உடையாபட்டி, சேலம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை மணி 4 முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஞானஸ்கந்தர், குருநாதர்

அம்மன்

ஸ்கந்தமாதா, பராசக்தி

தலவிருட்சம்

கடம்ப மரம்

தீர்த்தம்

உத்திரவாகினி, கன்னிமார்ஓடை

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

உடையாபட்டி

மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

1965 ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான், தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி, இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். காலப்போக்கில் பெரிய அளவில் எண்ணற்ற கண்கவர் சிற்பங்களுடன் கூடிய கோயிலாக இந்த ஆஸ்ரமம் கட்டப்பட்டுள்ளது. சேலம் நகருக்கு மிக அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த கந்தாசிரமம் அமைந்துள்ளது.

முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும்(இதயம்), முருகன் அறிவாகவும்(மூளை) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சந்நிதிகளை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகிறது. அதனின் பயனாக உயிரான தாயார் சாந்தத்தையும் அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள். முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் என்று, ஜோதிட சாஸ்திரப்படி, முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர், புவனேஸ்வரி, முருகன் சன்னிதானத்தில் உள்ளது.