Tag Archives: திருத்திணை
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை, கடலூர் மாவட்டம்.
சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை, கடலூர் மாவட்டம்.
சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் தரிசிக்க வேண்டுமானால் கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.
எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், “”நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்,” என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆச்சரியமடைந்த விவசாயி சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார்.
முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் “ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?” எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். வயலில் வேலை செய்ததால் “விவசாயி” என்றும் பெயர் பெற்றார்.