Tag Archives: காரமடை

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91 4254 272 318, 273 018, 94420 16192

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நஞ்சுண்டேஸ்வரர்
உற்சவர் பிரதோஷ நாயனார்
அம்மன் லோகநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரமடை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

அமுதம் பெற, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது கயிறாகப் பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் நஞ்சை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களைக் காக்க, நஞ்சை விழுங்கினார். அப்போது அம்பிகை, அவரது கழுத்தைப் பிடித்து நஞ்சு உடலுக்குள் செல்லாமல் நிறுத்தினாள். நஞ்சு கழுத்திலேயே தங்கியது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

தேவர்களை காப்பதற்காக நஞ்சை உண்டவர் என்பதால் இவர், “நஞ்சுண்டேஸ்வரர்என்று பெயர் பெற்றார். திருநீலகண்டன் என்றும் இவருக்குப் பெயர் உண்டு.

அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், காரமடை

அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், காரமடை – 641 104, மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4254 – 272 318, 273 018 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அரங்கநாதர்
உற்சவர் வெங்கடேசப்பெருமாள்
தாயார் ரங்கநாயகி
தல விருட்சம் காரைமரம்
தீர்த்தம் பிரம்ம, கருட மற்றும் அஷ்டதீர்த்தம்
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அரங்கவெங்கடேச அச்சுதன்
ஊர் காரமடை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் கருடாழ்வாருக்கு திருமால், மகாலட்சுமியின் திருமணக்கோலம் காண வேண்டுமென ஆசை எழுந்தது. அதனை சுவாமியிடம் தெரிவித்தார். அவர் விருப்பத்திற்காக சுவாமி, பூலோகத்தில் இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டியருளினார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். முன்னர், இப்பகுதி காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இப்பகுதியில் வசித்த இடையன் ஒருவன் பசுக்கள் மேய்த்து, வந்தான். அதில் ஒரு பசு மட்டும் தொடர்ந்து பால் சுரக்காமல் இருக்காமல் இருக்கவே, அதனை கண்காணித்தான். ஓரிடத்தில் காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பால் சொரிந்ததைக் கண்டான். அப்புதரை அவன் வெட்டியபோது, ரத்தம் பீறிட்டது. தகவல் தெரிந்த மக்கள் இங்கு வந்தபோது அசரீரி தோன்றி, சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிருந்ததை உணர்த்தியது. அதன்பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது. ராமானுஜர், கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் தலத்திற்கு சென்றபோது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். திருப்பதியில் மலையப்பசுவாமி(வெங்கடாஜலபதி) மலையிலும், அலர்மேலுமங்கைத்தாயார் அடிவாரத்திலும் காட்சி தருகின்றனர். ஆனால் இத்தலத்தில் சுவாமி கீழேயும், அருகிலுள்ள மலையில் ரங்கநாயகி தாயாரும் காட்சி தருகின்றனர். இவளை, “பெட்டத்தம்மன்என்று அழைக்கிறார்கள். சுவாமி, இந்த தாயாரையே திருக்கல்யாணம் செய்து கொள்வதாக ஐதீகம். மாசி பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில், இக்கோயிலில் இருந்து அர்ச்சகர் மலைக்கோயிலுக்குச் சென்று, கும்பத்தில் தாயாரை ஆவாஹனம் செய்து(எழுந்தருளச்செய்து) கோயிலுக்கு கொண்டு வருகிறார். அப்போது பெருமாள் சன்னதியில் இருந்து இராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கும் வைபவம் நடக்கிறது. அதன்பின் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் அதிகாலையில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது.