Tag Archives: ஆனையூர்

ஐராவதீஸ்வரர் திருக்கோயில், ஆனையூர்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், ஆனையூர், மதுரை, மதுரை மாவட்டம்.

மூலவர் ஐராவதீஸ்வரர் (திருஅக்னீஸ்வரமுடைய பரமசுவாமிகள்)
உற்சவர் சந்திரசேகர், நடராஜர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஅக்னீஸ்வரம்
ஊர் ஆனையூர்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன்பு, வேடுவமன்னன் ஒருவன் வாலாந்தூர் பகுதியினை ஆண்டு வந்தான். அவனது ஆட்சியின் போது, உத்தப்பநாயக்கனூர் எனும் நகரம் வாணிப நகரமாக இருந்தது. அங்கே வணிகர்கள் பலர், தற்போது கோயில் வீற்றுள்ள கற்றாழைக்காடு வழியாக அடிக்கடி சென்று வந்தனர்.

அப்போது, அக்கற்றாழைக் காட்டில் வசித்த வெள்ளையானை (ஐராவதம்) ஒன்று அடிக்கடி கோயிலின் எதிரே இருந்த பொற்றாமரைக் குளத்தில் இருந்து நீரினை தனது தும்பிக்கையில் உறிந்து, கற்றாழைக் காட்டிற்குள் செல்வதைக் கண்டு திகைத்த வணிகர்கள் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தனர். மன்னர் உத்தரவின் பேரில் பணியாட்கள் அக்காட்டில் இருந்த கற்றாழைகளை வெட்டிட, அங்கே ஓர் கதம்பமரத்தின் அருகே இருந்த கற்றாழையினை வெட்டியபோது, ரத்தம் பீறிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், அவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக வீற்றிருந்ததைக்கண்ட மன்னர், ஐராவதம் தொடர்ந்து சிவலிங்கத்திற்கு பொற்றாமரைக் குளத்தில் இருந்து நீரினை எடுத்து அபிஷேகம் செய்ததை அறிந்து வியப்புற்றார். பின், சுயம்புலிங்கமாக வீற்றிருந்த சிவபெருமானுக்கென தனியே கோயிலை எழுப்பி வழிபட்டார்.