Tag Archives: கிருஷ்ணாபுரம்
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், கிருஷ்ணாபுரம்
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வெங்கடாசலபதி |
உற்சவர் |
– |
|
ஸ்ரீ தேவி பூதேவி |
தாயார் |
– |
|
பத்மாவதி |
தல விருட்சம் |
– |
|
புன்னை |
தீர்த்தம் |
– |
|
தெப்பக்குளம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
பர்பகுளம் |
ஊர் |
– |
|
கிருஷ்ணாபுரம் |
மாவட்டம் |
– |
|
திருநெல்வேலி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
16ம் நூற்றாண்டுக் கோயில் இது. கோயிலுக்கென்று புராண வரலாறு ஏதும் இல்லை என்றாலும் மிகச் சிறந்த சிற்பக் கலைக் கூடமாக திகழ்கிறது. சிற்பி ஒருவன் பாறையை பார்க்கிறான். அப்பாறையில் இயற்கையாக செந்நிற ரேகைகள் ஓடுவதை காண்கிறான். அந்த பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஒடுகிறது. அவன் எண்ணத்தில் உருவான கற்பனை எழ அதில் தன் உளி வேலையை காட்டுகிறது. பாறையைக் கண்ட சிவப்பு ரேகைகள் வீரனின் விலாவில் வடியும் இரத்தப் பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது. அந்த சிலை வடிவைத் தூணாக நிறுத்தி விடுகிறான் சிற்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்ததுதான் கிருஷ்ணாபுரத்து கோயில் சிற்பங்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தலாம். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் என்றால் அவை உலக அளவில் புகழ்பெற்றது என்றே சொல்கிறார்கள். அத்தனை நுணுக்கமாகவும் அழகுணர்ச்சியோடும், கல்லும் பேசுமோ என வியக்க வைக்கும் அளவிற்கு சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் அங்க உருவங்கள் அணிகலன்களோடு காண்போரை ஒரு நிமிடம் ஆச்சர்யத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும்.
அருள்மிகு ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம்
அருள்மிகு ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
+91-4633-245250, 98429 40464
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் | |
தல விருட்சம் | – | நெல்லிமரம் | |
தீர்த்தம் | – | அனுமன் தீர்த்தம் | |
புராணப் பெயர் | – | கிஷ்கிந்தாபுரம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கிருஷ்ணாபுரம் | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் இராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை இராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்த குகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு அதனுள் நுழைந்து பார்த்தனர். அங்கே நீர் நிறைந்த குளங்கள், மாளிகைகள், கோபுரங்கள் இருந்ததையும், குளத்தின் அருகே சுயம்பிரபை என்ற பெண் தவத்தில் இருப்பதையும் கண்டனர்.(இந்தக் குகையையும் குளத்தையும் இப்போதும் பார்க்கலாம்) சுயம்பிரபையை கண்ட ஆஞ்சநேயர் அவளை வணங்கி, “தாங்கள் யார்? என்று கேட்கிறார்.” அதற்கு சுயம்பிரபை,”முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இந்த பகுதியில் அழகிய ஊரை அமைத்தான். ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்றான். அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் வாழ்ந்து வந்தான். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த இந்திரன் மயனைக் கொன்று விட்டான். கொலைப்பாவத்தால் சிரமப்பட்ட இந்திரனைக் காக்க தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனின் ஆணைப்படி கங்கை இந்த குகைக்குள் வர அதில் குளித்து தன் பிரம்மகத்தி தோஷத்தை இந்திரன் போக்கி கொண்டான். அன்றிலிருந்து இந்த குளத்தை நான் காத்து வருகிறேன். அத்துடன் இராமதூதன் அனுமன் இப்பகுதி வரும் போது அவனிடம் ஒப்படைத்து விட்டு நீ தேவலோகம் வந்து விடலாம்” என்று பிரம்மன் கூறினார். “எனவே இன்று முதல் இந்த தீர்த்தத்தை நீ பாதுகாத்து வரவேண்டும். நான் தேவலோகம் செல்கிறேன்” என்றாள் சுயம்பிரபை. ஆனால் அனுமனோ, “தாயே, சீதா தேவியை இராமருடன் சேர்த்து வைக்காமல் நாங்கள் எங்கும் தங்க மாட்டோம். மேலும் இராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின் இங்கு வந்து தங்குகிறேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார். இலங்கையில் வெற்றி கண்ட இராமர் சீதையுடன் புஷ்பவிமானத்தில் அயோத்தி திரும்புகிறார். அப்போது இத்தலத்தில் வசிக்கும் சுயம்பிரபை பற்றியும், அவள் பாதுகாத்துக்கொண்டிருக்கும் தீர்த்தத்தைப்பற்றியும் இராமரிடம் ஆஞ்சநேயர் எடுத்துக் கூறினார்.
அனுமன் கூறியதைக்கேட்ட இராமரும், “ஆஞ்சநேயா. பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அவசியம் இத்தலத்திற்கு வருவோம்” என்றார். இராமர் பட்டாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. ஒரு சுபமுகூர்த்த நாளில் ஆஞ்சநேயரை அழைத்துக்கொண்டு கிருஷ்ணாபுரம் வந்தார் இராமர். ஆஞ்சநேயரை யந்திரங்கள் எழுதச்செய்து, தானே யாகம் வளர்த்து அனுமனைப் பிரதிஷ்டை செய்து, “நீ இங்கேயே தங்கி உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும்” என்று உத்தரவிடுகிறார் இராமர்.