Tag Archives: ஆரல்வாய்மொழி
அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி
அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்
*********************************************************************************************
கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.
தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்‘ என்ற பெயர் வந்ததாம்.
“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப் …..
………(சிலப்பதிகாரம்)
இதன் மூலம் “இயக்கி” என்னும் பெண் தெய்வம் இருந்ததத உணரமுடிகிறது. “இயக்கி“யே “இசக்கி“யாக மருவியதோ?
அகராதி “இசைக்கி” என்ற சொல்லுக்கு “மனதைக் கவர்பவள்” என்ற பொருளைத் தருகிறது. இசக்கி அம்மனை நீலி என்னும் பேய் தெய்வமாக கருதுகின்றமை வில்லுப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.
முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித் தாள். இவளின் மகள் இசக்கி. இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.
எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள். இசக்கியின் ஊரிலேயே அவர் களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது.