Tag Archives: தலைச்சங்க நாண்மதியம்-தலச்சங்காடு
அருள்மிகு நாண்மதியப்பெருமாள், தலைச்சங்க நாண்மதியம் (தலச்சங்காடு)
அருள்மிகு நாண்மதியப்பெருமாள், தலைச்சங்க நாண்மதியம் (தலச்சங்காடு)-609107 நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 99947 29773 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாண்மதியப்பெருமாள் |
உற்சவர் | – | வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி |
தாயார் | – | தலைச்சங்க நாச்சியார் |
தீர்த்தம் | – | சந்திர புஷ்கரணி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | தலச்சங்காடு |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, அதிலிருந்து மகாலட்சுமிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன். இவர், இலட்சுமியின் அண்ணன் ஆவார். நவகிரகத்தில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகிறது. சந்திரன் மிக அழகானவர். இவர் தேவகுருவிடம் கல்வி கற்று, பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு முறை மகாவிஷ்ணுவை குறித்து “ராஜசூய யாகம்” செய்தார். சகல வெற்றிகளையும் தரும் இந்த யாகத்திற்கு ஏராளமான முனிவர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் தேவகுருவின் மனைவி தாரையும் வந்தாள். சந்திரனும், தாரையும் நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் விரும்பத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த குரு, திருமாலிடம் முறையிட்டார். சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார். இதற்கிடையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் என்ற குழந்தை பிறந்தது. பின்னர் திருமால் கூறியபடி குருவிடம் மனைவியை ஒப்படைத்தான் சந்திரன். தந்தை மீது புதனுக்கு வெறுப்பு ஏற்பட்டு, இமயமலையில் கடும் தவம் செய்து கிரக பதவியடைந்தான்.
இதைத்தவிர சந்திரன் இன்னொரு தவறும் செய்து விட்டான். தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனைத் திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,”உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்” என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழுச் சந்திரன் தேய தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது. வருத்தமடைந்த அவன் திருமாலிடம் சென்று தன் குறையை கூறினான். அதற்கு பெருமாள்,”சந்திரனே. நீ உடனே ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்கநாண்மதியம் ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி என்னை வழிபட்டால் உன் சாபம் நீங்கும்” என்றார். அவர் கூறியபடி ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன், கடைசியாகத் தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடிப் பெருமாளை வழிபட்டான். உடனே அவனுக்கு ஏற்பட்ட தோஷமும், நோயும் விலகியது. பெருமாள் அவனுக்கு காட்சி கொடுத்து அவனை அப்படியே தலையில் சூடிக்கொண்டார்.