Tag Archives: அன்னூர்
மன்னீஸ்வரர் திருக்கோயில், அன்னூர்
அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில், அன்னூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4254 – 262 450, 98422 – 38564
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மன்னீஸ்வரர் (அன்னீஸ்வரர்) | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | அருந்தவச்செல்வி | |
தல விருட்சம் | – | வன்னி | |
ஆகமம் | – | காரணாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மன்னியூர் | |
ஊர் | – | அன்னூர் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி வள்ளிச்செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற சிவபக்தன், இங்கு வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த வேலையும் தெரியாது என்பதால், வேட்டையாடி வந்தான். ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை. பசியின் காரணமாக, வள்ளிக்கிழங்கை கோடரியால் வெட்டி சாப்பிட்டான். கிழங்கை வெட்டிய பிறகும், அது அளவில் குறையாமல் அப்படியே இருந்தது. ஆச்சரியத்துடன், மேலும் கிழங்கை வெட்டவெட்ட கிழங்கின் நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறிந்துகொள்ள, கூடுதல் ஆழத்திற்கு வெட்டினான். அப்போது கிழங்கில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த வேடனிடம் அசரீரியாக ஒலித்த குரல்,”இனி உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை செய்யாமல் இரு. இதுவரையில் நீ செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது” என்றது. வேடன் மன்னனிடம் சென்று நடந்த சம்பவங்களைத் தெரிவித்தான். இங்கு வந்த மன்னன் ரத்தம் வெளிப்பட்ட இடத்தில் தோண்டியபோது, மண்ணிற்கு அடியில் ஒரு இலிங்கத்தைக் கண்டான். இலிங்கத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்தான். முடியவில்லை. எனவே, இலிங்கத்தின் மீது சங்கிலியைக் கட்டி, யானையைக் கொண்டு இழுத்துப் பார்த்தான். ஆனால், இலிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன்,”தான் இவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புவதாகவும், அதனால் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டாம்” எனவும் கூறினார். எனவே, மன்னன் இலிங்கம் இருந்த இடத்திலேயே கோயில் கட்டி வழிபட்டான்.