Tag Archives: கொழுமம்
அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம்
அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
+91-4252 – 278 644 , 93451-96814 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கல்யாணவரதராஜர் | |
தாயார் | – | வேதவல்லி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | அமராவதி தீர்த்தம் | |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சங்கரராம நல்லூர் | |
ஊர் | – | கொழுமம் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியை சோழமன்னன் ஒருவன் ஆட்சி செய்தபோது, நாட்டில் மழை வளம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றியது. இதனால், மக்கள் பஞ்சத்தில் வாடினர். நாட்டில் குறைவிலாது மழை பெய்து, மக்கள் வாழ்வில் சிறக்க அருளும்படி மன்னர், மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு, மழைவளம் அருளினார். நாடு செழித்தது. மக்களுக்கு அருளிய மகாவிஷ்ணுவிற்கு மன்னர், இவ்விடத்தில் கோயில் கட்டினார்.
இத்தலத்திற்கு அருகில் சிவாலயம் ஒன்று உள்ளது. சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வூர் முன்பு சிவனின் திருப்பெயரான “சங்கரன்” பெருமாளின் திருநாமமான “ராமன்” என்ற பெயர்களை இணைத்து “சங்கரராமநல்லூர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால், சுவாமிக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் உள்ள வேதவல்லி தாயாருக்கு வில்வ இலைகளைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகிறது.
அமராவதி நதியின் தென்கரையில் சுற்றிலும் பசுமையுடன் அமைந்துள்ள இத்தலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர் திருமணக்கோலத்திலும், அவருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் தாயாரும் அருளுகின்றனர். முன் புறம் கருடாழ்வார் இருக்கிறார். சுவாமியின் பாதமும் உள்ளது.
கோயில் முகப்பில் உள்ள மண்டபத்தின் தூணில் இருக்கும் வீரஆஞ்சநேயர், வாயுமூலையை பார்த்தபடி வரதராஜரை நோக்கி உள்ளார். இதன்மூலம் தன் தந்தைக்கும், நாராயணனுக்கும் ஒரே நேரத்தில் மரியாதை தருவதை இங்கு காணமுடிகிறது. இவரது திருவுருவத்திற்கு மேலே சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. வியாச முனிவர், இவரை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றுள்ளார். கோயில் வளாகத்திற்கு வெளியே கொடிமரம் உள்ளது.
அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம்
அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4252 – 278 831 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படுகிறது.
மூலவர் | – | தத்தாத்ரேயர் | |
அம்மன் | – | சவுந்திரநாயகி | |
தலவிருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | அமராவதி | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | குமாரலிங்கம் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார். மகரிஷி மரண நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி, “நான் உன்னை மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார்.” “என்ன பரிகாரம் செய்தால் எனது பாவம் நீங்கும்?” என்று மன்னர் கேட்க, “இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்” என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர், சிவனைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார்.
மகரிஷி இறந்த பின், பரிகாரத்திற்காக கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்குள்ள சிவன், எந்த திருவிழாக்களையும் கொண்டாடாமல் இருக்கிறார். மகரிஷி இறந்த சோக சம்பவத்தை நினைவுகூறும் வகையில் இங்கு சிவனுக்குரிய சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை. வைகாசியில் தத்தாத்ரேயருக்கு குருபூஜை மட்டும் நடக்கும்.