Tag Archives: மதுராந்தகம்
அருள்மிகு ஏரிகாத்த இராமர் திருக்கோயில், மதுராந்தகம்
அருள்மிகு ஏரிகாத்த இராமர் திருக்கோயில், மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்
திரேதா யுகத்தில் வாழ்ந்தவர் மகத்தான தவச்சிலரான விபண்டக மகரிஷி. ஸ்ரீ ராமபிரான், சீதாபிராட்டி, இளைய பெருமாளான இலக்குவனுடன் வனவாசம் செய்தபோது விபண்டக மகரிஷியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஸ்ரீராமனையும், ஸ்ரீஜானகியையும் தரிசித்த விபண்டகர், ஸ்ரீராமபிரானின் திருக்கல்யாண தரிசனத்தைப் பெறாமல் இருந்துவிட்டோமே என்று தன் மனத்திற்குள்ளேயே வருந்தினார். அதனைத் தன் திருவுள்ளத்தில் அறிந்த ராமபிரான் தான் மீண்டும் அயோத்திக்குத் திரும்பும்போது திருக்கல்யாண தரிசனம் தருவதாக வாக்களித்தார்.
ஸ்ரீ ராமபிரான் புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது, மதுராந்தகம் திருத்தலத்திற்கு உயரே விமானம் நின்றதாகவும், அப்போது விபண்டக மகரிஷிக்கு ஸ்ரீராமர், ஸ்ரீசீதாபிராட்டியின் திருக்கரத்தைப் பற்றியவாறு இலக்குவனுடன் திருக்கல்யாண கோலத்தில் சேவை சாதித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.