Tag Archives: திருச்சோபுரம்
மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில், திருச்சோபுரம்
அருள்மிகு மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில், திருச்சோபுரம், தியாகவல்லி, கடலூர் மாவட்டம்.
+91-94425 85845
காலை 8.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர் | |
உற்சவர் | – | சோபுரநாதர் | |
அம்மன் | – | தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | வங்கக் கடல், கிணற்று தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருச்சோபுரம், தியாகவல்லி | |
ஊர் | – | திருச்சோபுரம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர் |
கயிலாயத்தில் சிவன், அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த, தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் இலிங்கம் அமைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் இலிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகிலிருந்த மூலிகைச் செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் இலிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த இலிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.
இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் இலிங்கமாகக் காட்சி தருகிறார். இலிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். இலிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. மஞ்சளும், குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால், திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.