Tag Archives: திருவொற்றியூர்
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர்
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்.
+91- 98402 84456 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பட்டினத்தார் | |
தலவிருட்சம் | – | வில்வம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவொற்றியூர் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சிவசருமர், சுசீலை தம்பதியருக்கு, சிவபெருமானே மகனாகப் பிறந்தார். மருதவாணர் என்றழைக்கப்பட்ட இவரை, இதே ஊரில் வசித்த திருவெண்காடர் – சிவகலை தம்பதியர் தத்தெடுத்து வளர்த்தனர். திருவெண்காடர் வணிகம் செய்து வந்தார். மருதவாணரும் வளர்ப்புத்தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் வியாபாரத்திற்கு சென்று திரும்பிய மருதவாணர், தவிட்டு உமியால் செய்த எருவை மட்டும் கொண்டு வந்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட தந்தை, எருவை வீசியெறிந்தார். அதற்குள் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்ட ஓலை இருந்தது. “மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது” என்பதை உணர்ந்தார் திருவெண்காடர். பின் இல்லறத்தை துறந்த அவர், பிறப்பற்ற நிலை வேண்டி சிவனை வணங்கினார். துறவியானார். காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் இத்தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. அங்கிருந்த சிலரை அழைத்த வெண்காடர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் மூடவே, இலிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்” என்று அழைக்கப்பட்டார்.
அருள்மிகு படம்பக்கநாதர்(தியாகராஜசுவாமி) திருக்கோயில், திருவொற்றியூர்
அருள்மிகு படம்பக்கநாதர்(தியாகராஜசுவாமி) திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்.
+91-44 – 2573 3703 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர் | |
அம்மன் | – | வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி | |
தல விருட்சம் | – | மகிழம், அத்தி | |
தீர்த்தம் | – | பிரம்ம, நந்தி தீர்த்தம் | |
ஆகமம்/பூஜை | – | காரணம், காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவொற்றியூர் | |
ஊர் | – | திருவொற்றியூர் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் |
பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக இலிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், “ஆதிபுரீஸ்வரர்” என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் “திருவொற்றியூர்” என்று பெயர் பெற்றது.
சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், “மாணிக்க தியாகர்” என்றும் அழைக்கப்படுகிறார்.