Tag Archives: சி.சாத்தமங்கலம்
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம்
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாஸ்தா | |
அம்மன் | – | பூரணை, புஷ்கலை | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சாஸ்தாமங்கலம் | |
ஊர் | – | சாத்தமங்கலம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு திருடர்களால் மிகவும் தொந்தரவு ஏற்பட்டு வந்தது. இதனால் வருந்திய மக்கள் காவல் தெய்வமான சாஸ்தாவை வழிபட விரும்பினர். இதன் அடிப்படையில் இங்கு பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு திருடர்களின் தொந்தரவு நீங்கி நிம்மதி ஏற்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் திருடர்கள் நுழைந்து பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரின் ஐம்பொன்சிலைகளை திருடி சென்று விட்டனர். பின்னர் ஹரிஹரபுத்திரரின் அருளால் அவர்களே இச்சிலைகளை இங்கு கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விட்டனர். கையில் சாட்டையுடன் உள்ள இந்த சாஸ்தாவை வணங்கினால் திருடர்கள் மற்றும் எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஹரிஹரபுத்திர சுவாமி சாஸ்தா மூலஸ்தானத்தில் இருபுறமும் இரண்டு அம்பாளுடன் (பூரணை, புஷ்கலை) கருங்கல் சிலா விக்ரகமாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார். மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. இங்குள்ள சாஸ்தாவிற்கு வாகனமாக யானை வாகனம் உள்ளது. இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும். மேலும் ஐயனார் கோயிலுக்கே உரிய விதத்தில் சுமார் பத்தடி உயரம் கொண்ட நான்கு குதிரைகள் சுதையால் செய்யப்பட்டுள்ளன. சாஸ்தா கையில் சாட்டையுடன் இருப்பது சிறப்பு.