Tag Archives: பந்தநல்லூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர், (திருப்பந்தணைநல்லூர்), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
91- 435-2450 595,+91- 435-2450 595, 98657 78045 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பசுபதீஸ்வரர் | |
அம்மன் | – | வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி | |
தல விருட்சம் | – | சரக்கொன்றை | |
தீர்த்தம் | – | சூரிய தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | பந்தணைநல்லூர் | |
ஊர் | – | பந்தநல்லூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், திருநாவுக்கரசர் |
சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன், 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல, பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன், பார்வதியைப் பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எத்த, அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. “இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்” என்றார். பந்து அணைந்த தலம் ஆதலால் “பந்தணை நல்லூர்” ஆனது. பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு, மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த இலிங்கத்தைப் பார்த்து, அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய, பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க, பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் அடைகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன், தன்னைத் திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன், “வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர்” என்கிறார். அதன்படி செய்து அம்மன் சிவனைத் திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார்.
பசுவின் பதியாக வந்ததால் சிவன் “பசுபதீஸ்வரர்” ஆனார். சுவாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நவகிரக தோஷம் உள்ளவர்கள் சுவாமி, அம்மன், நவகிரகத்தை சுற்றுவது நலம். நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது. விஷ்ணு தனி கோயிலில் ஆதிகேசவப்பெருமாளாக அருள்பாலிக்கிறார்.