Tag Archives: திருக்கண்ணங்குடி
அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி
அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி-611 104, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4365-245 350 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | லோகநாதப்பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் |
உற்சவர் | – | தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி, அரவிந்த நாயகி |
தாயார் | – | லோக நாயகி |
தல விருட்சம் | – | மகிழ மரம் |
தீர்த்தம் | – | சிரவண புஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருக்கண்ணங்குடி |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். “கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமா” என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதைத் தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்துப் பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு, கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெயைக் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர் கண்ணனை விரட்டிச் சென்றார்.
திருக்கண்ணங்குடியை “கிருஷ்ணாரண்யம்” என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள், கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,”வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்” என்றார். அதற்கு ரிஷிகள்,”கண்ணா, நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்” என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களைப் பற்றிக்கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதையறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர். கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் “கண்ணங்குடி” ஆனது.