Category Archives: வைப்பு தலம்

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில், அதிராம்பட்டினம்

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91 99440 82313, 94435 86451 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அபய வரதீஸ்வரர்

தாயார்

சுந்தர நாயகி

தல விருட்சம்

வில்வம், வன்னி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

அதிராம்பட்டினம்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.

அருள்மிகு அறப்பளீசுவரர் கோயில், கொல்லிமலை

அருள்மிகு அறப்பளீசுவரர் கோயில், கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்.

மூலவர் அறப்பளீசுவரர்
உற்சவர் தாயம்மை
புராணப்பெயர் கொல்லி அறப்பள்ளி, வளப்பூர்நாடு,

கொல்லி குளிரறைப்பள்ளி

ஊர் கொல்லிமலை
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு
வழிபட்டோர் காலாங்கி முனிவர், பதினெண் சித்தர்கள்
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

வைப்புத்தலப் பாடல்கள்:

சம்பந்தர் அறப்பள்ளி அகத்தியான் (2-39-4).

அப்பர் – 1. கொல்லி யான்குளிர் (5-34-1)

இன்று மக்கள் வழக்கில் கொல்லிமலைஎன்று வழங்குகிறது. இயற்கை வளம் மிக்க மலை. ‘வல்வில்ஓரிஎன்னும் மன்னன் ஆண்ட பகுதி. காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.

அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர்என்றாயிற்று.

இக்கோயிலுக்குப் பக்கத்தில் மீன்பள்ளிஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.

இக்கோயிலுக்கு மேற்கில் கொல்லிப்பாவைஎன்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று உள்ளது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.