Tag Archives: கமலாலய தீர்த்தம் – திருவாரூர்

யக்ஞேயஸ்வரர் திருக்கோயில், கமலாலய தீர்த்தம் – திருவாரூர்

அருள்மிகு யக்ஞேயஸ்வரர் திருக்கோயில், கமலாலய தீர்த்தம் திருவாரூர், திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் யக்ஞேயஸ்வரர்
அம்மன் உத்ரவேதி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
தீர்த்தம் கமலாலய தீர்த்தம்
ஊர் கமலாலய தீர்த்தம்திருவாரூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

படைப்புத் தொழில் செய்த பிரம்மா, சிவனைப்போலவே ஐந்து தலைகளுடன் இருந்ததால், தன்னையும் சிவனுக்கு இணையாகக் கருதி ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தை அடக்க சிவன், அவரது ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளினார். தவறை உணர்ந்த அவர், மன்னிப்பு வேண்டி ஒரு யாகம் நடத்த விரும்பினார். பூலோகத்தில் இத்தலத்தை தேர்ந்தெடுத்த அவர், சிவனை வேண்டி ருத்ர யாகம்நடத்தினார். மகிழ்ந்த சிவன் அவருக்கு, ரிஷபாரூடராக அம்பிகையுடன் காட்சி தந்தார். பிரம்மா அவரை வணங்கி, படைப்புத்தொழிலை மீண்டும் தொடர அருளும்படி வேண்டினார்.

அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மனுக்கு மீண்டும் படைக்கும் ஆற்றலை கொடுத்தார். எனவே இத்தலத்து சிவனுக்கு யக்ஞேஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. இவரை யாகநாதர்என்றும் அழைப்பர்.

சிவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் உத்ரவேதி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதற்கு காரணம் உண்டு. சிவன், அம்பிகையின் இருப்பிடம் கைலாயம். கைலாயத்தின் திசை வடக்கு. ஆகவே அம்பிகை வடக்கு திசையை இருப்பிடமாகக் கொண்டவள் ஆகிறாள். உத்ரம் என்றால் வடக்குவேதி என்றால் நாயகிஎன்று பொருள் உண்டு. எனவே இவள் உத்ரவேதிஎன அழைக்கப்படுகிறாள். எனவே இங்கு வழிபட்டால் கைலாயத்திற்கே சென்ற புண்ணியமும் கிடைக்கும்.