Tag Archives: சுசீந்திரம்
அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், சுசீந்திரம்
அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், கேப் ரோடு, ஆசிராமம், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம்.
+91- 94434 94473, 94430 02731 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி 7 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாஸ்தா | |
தல விருட்சம் | – | வில்வ மரம் | |
தீர்த்தம் | – | யாக குண்ட தீர்த்தம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சுசீந்திரம் | |
மாவட்டம் | – | கன்னியாகுமரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவைக் குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். வந்தவர் அவரது கண்ணில் மையைத் தடவ, கண்பார்வை கிடைத்தது. வியந்தவர் சாஸ்தாவை வழிபட அவர் காட்சி கொடுத்தருளினார். கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா” (அஞ்சனம் என்றால் கண், கண்டன் என்பது சாஸ்தாவின் மற்றொரு பெயரான மணிகண்டன்) என்று பெயர் பெற்றார்.
அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசூயா தன் கணவர் மீது கொண்ட பக்தியை உலகத்துக்கு அறிவித்து, அவளைப் போல பெண்கள் கணவருடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர். அனுசூயா அவர்களை சாப்பிட அழைத்தாள். நிர்வாண நிலையில் பரிமாறினால் தான் தாங்கள் சாப்பிடுவோம் என்று துறவிகள் நிபந்தனை விதித்தனர். இதைக்கேட்ட அனுசூயா சற்றும் கலங்கவில்லை. தன் கணவர் அத்திரியின் பாதத்தை பூஜித்த தீர்த்தத்தை கையில் எடுத்தாள். அதை மும்மூர்த்திகள் மீது தெளித்தாள். மூவரும் குழந்தைகளாயினர். பின்பு மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசூயா, அத்திரிக்குக் காட்சி தந்தனர். இவ்வாறு அத்திரி ஆஸ்ரமம் அமைத்து தங்கியதால் இத்தலம், “ஆஸ்ரமம்” என்று அழைக்கப்பட்டு ஆஸ்ராமம் என திரிந்தது. அத்திரி உண்டாக்கிய தீர்த்தம், இக்கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இதை யாக குண்ட தீர்த்தம் என்கிறார்கள்.
தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம்
அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம்.
+ 91- 4652 – 241 421
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தாணுமாலையன் | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | பிரபஞ்சதீர்த்தம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஞானாரண்யம் | |
ஊர் | – | சுசீந்திரம் | |
மாவட்டம் | – | கன்னியாகுமரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்“தான்.
மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். ஒரு சமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க,”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க, மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டி, தூங்கச் செய்தாள். சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வந்து வேண்ட, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகம் மகிழ்ந்து, மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு, முப்பெரும் கடவுளரும் வழிபடப்பட்டு வருகின்றனர்.
மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி காட்சியளிக்கும் தலம். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் “சசீந்திரம்” என பெயர் வழங்கலாயிற்று. அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும்.