Tag Archives: தாயமங்கலம்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம் – 630 709 சிவகங்கை மாவட்டம்.
********************************************************************************************************
+91 4564 206 614 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – வேம்பு
தீர்த்தம்: – மாரியம்மன் தெப்பம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – தாய்மங்கலம்
ஊர்: – தாயமங்கலம்
மாநிலம்: – தமிழ்நாடு
இப்பகுதியில் வசித்த வணிகர் ஒருவர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. மீனாட்சியம்மனிடம் தனது குறையைத் தீர்த்து அருளும்படி வேண்டிக்கொள்வார். ஒருசமயம் மதுரையில் இருந்து ஊர் திரும்பியபோது, வழியில் ஒரு சிறுமி யாருமில்லாமல் தனியே நின்று அழுது கொண்டிருந்தாள். அவளைப் பரிவுடன் விசாரித்தவருக்கு, குழந்தை இல்லாத தனக்கு மீனாட்சியே குழந்தையாக வந்ததாக எண்ணி மகிழ்ந்தார். குழந்தையைத் தன்னுடன் அழைத்து வந்தார். இங்குள்ள குளக்கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டு, நீராடச் சென்று திரும்பினார். அப்போது, குழந்தையைக் காணவில்லை. இதனால், மனம் வருந்தியவர் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் நடந்ததைக் கூறினார். இருவரும் தங்களுக்கு கிடைத்த குழந்தையும் கிடைக்கவில்லையே என எண்ணி உறங்கச் சென்றனர். அன்றிரவில் வணிகரின் கனவில் தோன்றிய அம்பிகை, தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள். மேலும், கற்றாழைக் காட்டில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு தனது பாதச்சுவடு இருப்பதாகச் சொன்னாள். அதன்படி அங்கு சென்ற வணிகர், சுவடு இருந்த இடத்தில் மண்ணை பிடித்து வைத்து, கோயில் எழுப்பினார். பிற்காலத்தில் இவளுக்கு சிலை வடித்து கோயில் பெரியளவில் கட்டப்பட்டது. அம்பிகைக்கு முத்து மாரியம்மன் என்ற பெயர் சூட்டப்பெற்றது.