Tag Archives: சேர்ந்தபூமங்கலம்
அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம்
அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.
மூலவர் : கைலாசநாதர்
அம்பிகை : சௌந்தர்யநாயகி
நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள். இரண்டும் சேர்ந்து “சேர்ந்தபூமங்கலம்” ஆயிற்று.
கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர். நவகைலாயங்களுக்கும் சென்று வழிபட்டால் நவக்கிரக தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் உண்டு.
வழிகாட்டி: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.