Tag Archives: திருமழபாடி
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி, அரியலூர் மாவட்டம்.
+91 04329 292 890, 97862 05278 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வைத்தியநாதசுவாமி, வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர் | |
அம்மன் | – | சுந்தராம்பிகை, பாலாம்பிகை | |
தல விருட்சம் | – | பனை மரம் | |
தீர்த்தம் | – | கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம் | |
ஆகமம் | – | காமிய ஆகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மழுவாடி, திருமழபாடி | |
ஊர் | – | திருமழபாடி | |
மாவட்டம் | – | அரியலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், அப்பர், சுந்தரர் |
மார்க்கண்டேய முனிவரின் பொருட்டு இறைவன் மழு ஏந்தி நடனமாடியதால் இத்தலம் – மழுவாடி – என்று பெயர் பெற்றது . இதுவே பின்பு “மழபாடி” என்றானது என்பர்.
பிரம்மனின் சத்திய லோகத்திலிருந்து புருஷாமிருகம் சிவலிங்கத்தையெடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. அதையறிந்த பிரம்மன் வந்து அச்சிவலிங்கத்தை மீண்டும் பெயர்க்க முயன்றபோது முடியாமல் போகவே,”இது வைரத்தூணோ” என்று சொல்லிப் புகழ்ந்ததால், இத்தல இறைவன் “வஜ்ஜிரதம்பேஸ்வரர்” ஆனார்.
திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கித் தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,”முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும்போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்” என்றது. சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு “ஜபேசர்” என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்கப்போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள “அயனஅரி” தீர்த்தக் குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர்வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார். அதன் பின் ஜபேசருக்கும், சுயசாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து, சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.