Tag Archives: திருச்சூர்
வடக்கு நாதர் திருக்கோயில், திருச்சூர்
அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில், திருச்சூர், கேரளா.
+91- 487-242 6040
காலை 4 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வடக்குநாதர் | |
பழமை | – | 2000-3000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருச்சூர் | |
மாவட்டம் | – | திருச்சூர் | |
மாநிலம் | – | கேரளா |
ஒருமுறை சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. இதற்காக தன்வந்திரி பகவான் நெய் தடவி, சிகிச்சை செய்தார். இதனால் இங்கு நெய்யால் செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் நெய்யே இலிங்கமாக இருப்பது ஆச்சரியம். இதை “தென் கைலாயம்” என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்த இத்தலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் இது.
12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான இந்த நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது. எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி, காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர். நெய் கட்டியாக உறைந்து வரும். கோடையின் வெப்பமோ, ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த நெய்யை உருகி விழச்செய்யாது. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள நெய் மணம் கிடையாது. நெய் இலிங்கத்திற்கு, நெய் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த இலிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது. அமர்நாத் லிங்கத்தை “பனிலிங்கம்‘ என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை “நெய்லிங்கம்‘ என அழைக்கிறார்கள்.
இங்குள்ள நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி, தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் இங்கு எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கோயிலின் சிறப்பம்சம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை. வடக்குநாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்.