Tag Archives: அய்யலூர்
அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில், அய்யலூர்
அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில், அய்யலூர், திண்டுக்கல் மாவட்டம்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கருப்பணசாமி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | அய்யலூர் | |
மாவட்டம் | – | திண்டுக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் கேரளாவிலிருந்து வணிகர்கள் பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, தமிழகம் வருவது வழக்கம். அப்படியொரு முறை வணிகர் கூட்டம் ஒன்று மாட்டுவண்டியில் வந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் தானாக நின்று போனது மாட்டுவண்டி. அந்த வண்டியின் முன்புறம், பாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த கல், அந்த இடத்திலேயே கருப்பண்ணசாமியாக உருவெடுத்தது. அவரையே காவல் தெய்வமாக எண்ணி மக்கள் கோயில் எழுப்பினர். கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர கருப்பணசாமியை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள் ஆடு, மாடு, நாய் என எந்தப் பிராணிக்காக வேண்டிக்கொண்டார்களோ, அதன் உருவத்தை மண் பொம்மையாக செய்து எடுத்துவந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இதையே ஈடு சுமத்துதல் என்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேறவோ, பொருட்கள் களவு போனாலோ, பில்லி சூன்யத்தை முறிக்கவோ வண்டிக் கருப்பருக்கு குட்டமுட்டி அளிப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வெள்ளாட்டின் கறியை மண்ணால் செய்யப்பட்ட முட்டியில் (கலயம்) வைத்து சமர்ப்பிப்பதையே குட்டிமுட்டி பிரார்த்தனை என்கிறார்கள். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஏழு கிராமங்களும் ஒன்றுகூடி கொண்டாடும் குதிரையெடுப்பு திருவிழா விசேஷம். இதற்காக வைகாசி அல்லது ஆனி மாதத்திலேயே, குளத்தில் களிமண் எடுத்துவந்து குதிரைகள் செய்து வைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள். விழாவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில், அதிகாலை வேளையில் நிகழும் முனீஸ்வரர் குருதி குடிக்கும் வைபவம் சிலிர்ப்பானது. இந்த ஆலயத்தில் அருளும் முனீஸ்வரருக்கான இந்த வைபம் நிகழும் நேரத்தில், எந்த வாகனமும் கோயிலைக் கடந்து போகக்கூடாது.