Tag Archives: செங்கம்

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம்

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேணுகோபால பார்த்தசாரதி,செம்பொன்ரங்க பெருமாள்

தாயார்

பத்மாவதி, ஆண்டாள்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

செங்கண்

ஊர்

செங்கம்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

இராமாயண காலத்தில் இராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் இராவணன் கொல்லப்பட்டான். இதனால் இராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் தீர இத்தலத்திற்கு வந்து 13 நாட்கள் வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று பிரம்மன் கூறினார். இதன்படி இராமனும் இத்தலம் வந்து 13 நாட்கள் தங்கி வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கியதாக தலபுராணம் கூறுகிறது.

கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்கப் பெருமாள் நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாள் அருகில் பத்மாவதியும், ஆண்டாளும் காட்சியளிக்கிறார்கள். உடன் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர்.

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம்

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்ரமணியர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் செங்கம், வில்வாரணி
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்குப் பூஜை செய்து வந்தார். வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார். அவர், தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார். ஒரு ஆண்டில் சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், “நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி, கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்எனக் கூறினார். மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி இலிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் இலிங்கத்திற்குக் குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து இலிங்கத்தை முருகனாகக் கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி; நெருப்பின் நிறம் கணபதி; அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், இலிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது. சிவன்தான் இலிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால், சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு இலிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார்.