Tag Archives: ஆலங்குடி

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

+91 99767 92377 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நாமபுரீஸ்வரர்

தாயார்

அறம்வளர்த்த நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

ஆலங்குடி

மாவட்டம்

புதுக்கோட்டை

மாநிலம்

தமிழ்நாடு

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து நஞ்சு வெளிப்பட்டது. முதலில் கிடைத்ததை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேவர்கள், விஷத்தை சிவபெருமானுக்கு வழங்கினர். சிவனும் உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தைக் குடித்தார். அவ்வாறு விஷமருந்திய பெருமான் குடிகொண்ட தலம் ஆலங்குடி. ஆலம் என்றால் விஷம், குடி என்றால் ஊர் அல்லது குடித்தல். இந்த சம்பவத்தை நிகழ்வு கூறும் வகையில், 1,305ம் ஆண்டு, சுந்தரபாண்டியன் என்ற மன்னன் சிவனுக்கு கோயில் எழுப்பினான். சிவநாமமாகிய நமசிவாய, சிவாயநம ஆகியவற்றை இவர் முன் அமர்ந்து சொன்னால், வாழும் காலத்தில் செல்வமும், வாழ்வுக்குப் பின் கயிலாய பதவியும் கிடைக்கும் என்பதால் நாமபுரீஸ்வரர் என்று பெயரிட்டான்.

தட்சிணாமூர்த்தி ரிஷபத்தோடும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக இரண்டு ரிஷிகளுடனும் அருள்பாலிக்கிறார். காலடியில், முயலகன் இருக்கிறான். இவரை மேதா தட்சிணாமூர்த்தி என்கின்றனர். ஏற்கனவே, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில், நவக்கிரக குரு ஸ்தலம் உள்ளதால், இதை இரண்டாம் குரு ஸ்தலம் என்கின்றனர். குரு பகவானுக்குரிய கொண்டைக்கடலை ஆலங்குடி தாலுகாவில் பயிரிடப்பெற்று, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் கோயில்களில் சூரியன், சந்திரன் இருப்பது வழக்கம், ஆனால், இங்கு சூரியன் மட்டுமே காணப்படுகிறார். சூரியனின் வலது பக்கம் கால பைரவரும், இடது பக்கம் அவருடைய மகனான சனீஸ்வரர், குழந்தை வடிவில் பாலசனீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளார். ஆக, இதை சனி ஸ்தலம் என்றும் கூறலாம். குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி காலங்களில் சென்று வர ஏற்ற தலமாக உள்ளது.

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-4374-269 407 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
உற்சவர் தெட்சிணாமூர்த்தி
அம்மன் ஏலவார்குழலி
தல விருட்சம் பூளை என்னும் செடி
தீர்த்தம் பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி, ஞான கூபம், பூளைவள ஆறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இரும்பூளை, திருவிரும்பூளை
ஊர் ஆலங்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார்என வழங்கப்படுகிறார். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள். குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது. தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள்.