Tag Archives: திருவடிசூலம்
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம்
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், திருஇடைச்சுரம், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2742 0485, 94445 – 23890 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஞானபுரீஸ்வரர், இடைசுர நாதர் | |
உற்சவர் | – | சந்திரசேகர் | |
அம்மன் | – | இமயமடக்கொடி, கோபரத்னாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | மதுரா தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஇடைச்சுரம், திருவிடைச்சுரம் | |
ஊர் | – | திருவடிசூலம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏறஏற, வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான். கையில் தயிர் கலயம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை அறிந்து தயிரைப் பருகக் கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் “நீங்கள் யார்?” என்று இடையன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றிக் கூறினார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன், அங்கு வந்து பாடல் பாடி, தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான்.
இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியவில்லை. இடையனாக இருந்தாலும் அழகு மிகுந்தவனாக இருந்ததைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், “எல்லாம் சிவன் சித்தம்” என்றெண்ணிக் கொண்டு அவனைப் பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, “இடைச்சுரநாதா” என்று வணங்கி, பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். “இடைச்சுரநாதர்” என்ற பெயரும் பெற்றார்.