Tag Archives: திருப்பனங்காடு

அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு

அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு, திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 4182 – 247 411 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் கிருபாநாயகி, அமிர்தவல்லி
தல விருட்சம் பனை
தீர்த்தம் ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு
ஊர் திருப்பனங்காடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

அகத்தியர் தெற்கு நோக்கி வரும்போது இவ்விடத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனவே, சிவனை மானசீகமாக எண்ணி வழிபட்டார். அப்போது, அருகிலுள்ள ஒரு வேம்பு மரத்தின் அடியில் தான் சுயம்பு லிங்கமாக இருப்பதாக, சிவன் அசரீரியாக ஒலித்தார். அகத்தியர் அங்கு சென்று பார்த்தபோது, வேம்பு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அகத்தியரைக் கண்ட முனிவர் அவரிடம், வேம்பு மரத்தின் அடியில் இருந்த சுயம்பு இலிங்கத்தைக் காண்பித்து விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அகத்தியர் இலிங்கத்திற்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால், அங்கு தண்ணீர் இல்லை. அகத்தியரின் மனதை அறிந்த சிவன், தன் தலையில் இருந்து கங்கை நீரை இவ்விடத்தில் பாய விட்டார். அந்நீர் தீர்த்தமாக அருகில் தேங்கியது. (இந்த தீர்த்தம் ஜடாகங்கை தீர்த்தம் என்ற பெயரில் கோயிலுக்கு அருகில் இருக்கிறது). அதில் இருந்து நீரை எடுத்த அகத்தியர் சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினார். பின் சிவனுக்கு படைக்க பழங்கள் இல்லாததால், அருகில் பழம் இருக்கிறதா என்று தேடினார் அகத்தியர். சிவன், அருகில் இருந்த பனை மரத்தில் இருந்து கனிகளை உதிரச்செய்தார். அகத்தியர் அதனை சுவாமிக்கு படைத்து வணங்கினார். அகத்தியரின் பூஜையில் மகிழ்ந்த சிவன், அவருக்கு காட்சி தந்தருளினார். பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால் தாளபுரீஸ்வரர்” (தாளம் என்றால் பனை என்றும் பொருள் உண்டு) என்று பெயர் பெற்றார்.

இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது. அகத்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே, மற்றோர் இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவர், “கிருபாபுரீஸ்வரராகசதுர பீடத்தில் அருளுகிறார். தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் இருவரும் ஒரே சிவனாகவே வழிபடப்படுகின்றனர். இவர்களில் அகத்தியர் வழிபட்ட தாளபுரீஸ்வரர் பிரதானமான மூலவராக இருக்கிறார். கிருபாபுரீஸ்வரருக்கு நேரே பிரதான வாயில் இருக்கிறது. இருவரும் தனித்தனியே கஜபிருஷ்ட விமானத்தின் கீழே இருக்கின்றனர். தாளபுரீஸ்வரரின் கருவறைச் சுவரில் இலிங்கோத்பவர், துர்க்கை அம்மனும், கிருபாபுரீஸ்வரர் கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணு, இடது புறத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். ஒரு பள்ளியறை மட்டும் இருக்கிறது. இருவருக்கும் அம்பாள்கள் தனித்தனி சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அடுத்தடுத்து இருக்கின்றனர். இதில் பிரதான அம்பாள் அமிர்த வல்லி உயரமாகவும், கிருபாபுரியம்பாள் சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கின்றனர்.