அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம்

அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4252 – 278 831 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

மூலவர் தத்தாத்ரேயர்
அம்மன் சவுந்திரநாயகி
தலவிருட்சம் வில்வம்
தீர்த்தம் அமராவதி
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குமாரலிங்கம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார். மகரிஷி மரண நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி, “நான் உன்னை மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார்.” “என்ன பரிகாரம் செய்தால் எனது பாவம் நீங்கும்?” என்று மன்னர் கேட்க, “இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர், சிவனைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார்.

மகரிஷி இறந்த பின், பரிகாரத்திற்காக கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்குள்ள சிவன், எந்த திருவிழாக்களையும் கொண்டாடாமல் இருக்கிறார். மகரிஷி இறந்த சோக சம்பவத்தை நினைவுகூறும் வகையில் இங்கு சிவனுக்குரிய சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை. வைகாசியில் தத்தாத்ரேயருக்கு குருபூஜை மட்டும் நடக்கும்.

மகரிஷியின் பெயரால், இங்குள்ள சிவன் தத்தாத்ரேயர்என்றே அழைக்கப்படுகிறார். இங்கு தியானம் செய்தால் மனம் ஒருமை அடையும். இறைவனை வேண்டித் தவம் செய்திட கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அமைதியான இத்தலத்தில், சிவன் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கி கையில் சவுந்தரமலருடனும் அருளுகின்றனர்.

பிரகாரத்தில் விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மன், பைரவர், சந்திரன், சூரியன் ஆகியோர் உள்ளனர். சிவன் சன்னதி முன்பு, மகரிஷி தவம் செய்த இடத்தில், சிறிய பீடத்துடன் தியான மண்டபம் உள்ளது. இத்தல விநாயகரின் திருநாமம் சுந்தர கணபதி.

திருவிழா:

மகரிஷி இறந்த பின், பரிகாரத்திற்காக கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்கு எந்த திருவிழாக்களும் இல்லை. வைகாசியில் தத்தாத்ரேயருக்கு குருபூஜை மட்டும் நடக்கும்.

வேண்டுகோள்:

மனஅமைதி கிடைக்க தியானம் செய்து, இறைவனை வேண்டிக் கொள்ளலாம். மாணவர்கள் ஞாபகசக்தி வேண்டி இங்கு தியானம் செய்யலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *