நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91 4254 272 318, 273 018, 94420 16192

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நஞ்சுண்டேஸ்வரர்
உற்சவர் பிரதோஷ நாயனார்
அம்மன் லோகநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரமடை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

அமுதம் பெற, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது கயிறாகப் பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் நஞ்சை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களைக் காக்க, நஞ்சை விழுங்கினார். அப்போது அம்பிகை, அவரது கழுத்தைப் பிடித்து நஞ்சு உடலுக்குள் செல்லாமல் நிறுத்தினாள். நஞ்சு கழுத்திலேயே தங்கியது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

தேவர்களை காப்பதற்காக நஞ்சை உண்டவர் என்பதால் இவர், “நஞ்சுண்டேஸ்வரர்என்று பெயர் பெற்றார். திருநீலகண்டன் என்றும் இவருக்குப் பெயர் உண்டு.

அம்பிகை, லோக நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். சிவனின் உடலில் நஞ்சு இறங்காமல் செய்து, மக்களைக் காப்பாற்றியதால் இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். இரண்டு கரங்களில் தாமரையுடன் காட்சி தரும் இவளது சிற்பம் திருவாட்சியுடன் சேர்த்து வடிக்கப்பட்டிருக்கிறது. சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்த தலம் இது. சிவன், அம்பிகைக்கு நடுவில் ஆறுமுக வேலவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இம்மூவரது சன்னதியும் ஒரே வரிசையில் அமைந்திருக்கிறது. 12 கரங்களுடன் காட்சி தரும் முருகனுடன் வள்ளி, தெய்வானையும் உள்ளனர். சிவனுக்கு இடதுபுறத்தில் அரங்கநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார். இவ்விருவருக்குமான தீர்த்தம் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜையின்போது தினமும் நஞ்சுண்டேஸ்வரர், அரங்கநாதர் கோயில் அர்ச்சகர்கள் இருவரும் ஒன்றாக சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கிறார்கள். நவராத்திரி விழாவின் பத்தாம் நாளில் அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் இக்கோயிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சிக்கு சிவனை அழைத்துச் செல்வது விசேஷம். அப்போது சிவன், பெருமாள் இருவரும் அருகருகில் செல்கின்றனர். அந்நேரத்தில் மட்டுமே இவ்விருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். இத்தலத்து விநாயகர், “செண்பக விநாயகர்என்று அழைக்கப்படுகிறார். சிவன் சன்னதியை சுற்றி வரும்போது கோஷ்டத்தின் அடியில் பாதாள விநாயகர் இருக்கிறார். மிகவும் சிறிய மூர்த்தியான இவரை வணங்கிவிட்டே பரிவார தேவதைகளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, சீடர்கள் இல்லாமல் தனித்து காட்சி தருகிறார். இவருக்கு வியாழக்கிழமை குரு ஓரையில் (காலை 6.30 முதல் 7 மணி) சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கோஷ்டத்தில் பிரதோஷமூர்த்தி, சிவதுர்க்கையும் இருக்கிறாள். துர்க்கைக்கு அருகில் சிவலிங்கத்தை இராகு, கேது வழிபடும் சிற்பம் இருக்கிறது. இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இராகு காலத்தில் துர்க்கையை வணங்கி, இந்த இலிங்கத்தையும் தரிசித்துச் செல்கிறார்கள். நவக்கிரக சன்னதி கிடையாது. கால பைரவர், சூரியன் உள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, சிவன் சன்னதியைச் சுற்றிலும் கோஷ்டத்தில் 8 யானைகள் சுவாமி விமானத்தை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு யானை சிற்பத்திற்கு கீழ் பிரம்மாவும், மற்றொரு யானைக்கு கீழே இலட்சுமி நாராயணரும் காட்சி தருவது விசேஷம். சிவன், பாற்கடல் நஞ்சை ஒரு பிரதோஷ வேளையில் அருந்தினார். எனவே பிரதோஷ நேரத்தில் இங்கு சிவனுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. அவ்வேளையில் விஷக்கடி பட்டவர்கள் வேண்டிக்கொள்ள, அவை நீங்குவதாக நம்பிக்கை. பிற நாட்களில் மாலை இதே வேளையிலும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களைப்போல இல்லாமல் சற்று பட்டையாக இருக்கிறது. இந்த இலிங்கம் செந்நிறமாக காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். இவருக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பை காண்பது அரிது.

திருவிழா:

சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

கோரிக்கைகள்:

திருமணத் தடை, சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சிவன், அம்பாள், சிவதுர்க்கைக்கு புத்தாடை அணிவித்து, வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *