Category Archives: சிவ ஆலயங்கள்
தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில், நெடுங்குணம்
அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில், நெடுங்குணம், திருவண்ணாமலை மாவட்டம்.
காலை6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தீர்க்காஜலேஸ்வரர் | |
உற்சவர் | – | தீர்க்காஜலேஸ்வரர் | |
அம்மன் | – | பாலாம்பிகை | |
தீர்த்தம் | – | கிணற்று நீர் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நெடுங்குணம் | |
மாவட்டம் | – | திருவண்ணாமலை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சுகபிரம்ம முனிவர் தவம் செய்ய ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தார். அந்த மலை சிவசொருபமாகவே காட்சி தந்ததை கண்டு மெய்சிலிர்த்தார். சிவனை எண்ணி, கடும் தவத்தில் மூழ்கினார். முன்னதாக விஷ வண்டுகளோ பூச்சிகளோ தாக்காமல் இருக்க தான் அமர்ந்திருக்கும் இடத்தை சுற்றி அரண் அமைக்கவும், தண்ணீரால் சுத்தம் செய்யவும் எண்ணினார். மலை முழுவதும் சுற்றியும் தண்ணீர் கிடைக்க வில்லை. இறைவனை நோக்கி மனம் உருகிப் பிரார்த்தித்தார். அங்கே தண்ணீர் மெல்ல ஊற்றெடுத்தது. அந்த நீரை எடுத்துப்பருகினார். சிவலிங்கம் ஒன்றைப் பிரதீஷ்டை செய்து அதனை அபிஷேகித்தார். ஈசனை வணங்கிவிட்டு கடும் தவத்தில் மூழ்கினார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் தம்பதி சமேதராகக் முனிவருக்கு காட்சி தந்தார். தனது மனக்குறையை தீர்த்து வைத்த சிவபெருமானை வணங்கி தொழுதார் சுகபிரம்மர். காலங்கள் கழிந்தன. சோழமன்னன் ஒருவன் இந்த வழியாக வந்த போது மலையைக்கண்டான். மலைமீது முனிவர்கள் பலர் சிவபூஜையில் இருப்பதைக் கண்டான். அவர்களை வணங்கி இந்தமலையின் மாண்பும், சுகபிரம்மருக்கு ஈசன் காட்சி தந்தது குறித்தும் அறிந்தான். மகிழ்ந்த சோழ மன்னன் மலையடிவாரத்தில் கோயில் எழுப்பினால், ஊர்மக்கள் வணங்கிட வசதியாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டு, அப்படியே கோயில் எழுப்பினான். இறைவனுக்கு “தீர்க்காஜலேஸ்வரர்” என்னும் திருநாமமும் சூட்டி மகிழ்ந்தான்.
தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம்
அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம்.
+ 91- 4652 – 241 421
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தாணுமாலையன் | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | பிரபஞ்சதீர்த்தம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஞானாரண்யம் | |
ஊர் | – | சுசீந்திரம் | |
மாவட்டம் | – | கன்னியாகுமரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்“தான்.
மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். ஒரு சமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க,”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க, மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டி, தூங்கச் செய்தாள். சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வந்து வேண்ட, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகம் மகிழ்ந்து, மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு, முப்பெரும் கடவுளரும் வழிபடப்பட்டு வருகின்றனர்.
மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி காட்சியளிக்கும் தலம். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் “சசீந்திரம்” என பெயர் வழங்கலாயிற்று. அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும்.