Category Archives: சிவ ஆலயங்கள்
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை.
+91- 44- 2228 0424, 93826 77442, 99411 49916
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தேனுபுரீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | தேனுகாம்பாள் | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | கபில தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மாடையம்பதி | |
ஊர் | – | மாடம்பாக்கம்–சென்னை | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். ஒரு இலிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்களைத் தூவினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, “மணலில் இலிங்கத்தை வைக்க மனமில்லை” என்றார். சிவன் அவரிடம், “கையில் இலிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியல்ல” எனச் சொல்லி அவரைப் பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார்.
பசுவாக பிறந்த கபிலர், இங்கு சிவனை வழிபட்டு முக்திபெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, “தேனுபுரீஸ்வரர்” எனப்பட்டார். “தேனு” என்றால் “பசு.” இவருக்கு “உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்” என்றும் பெயர் உண்டு.
கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இலிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. இலிங்கத்தைச் சுற்றி மண்டபம் போன்ற அமைப்பில் காப்பும், நாகாபரணமும் அணிவித்து உள்ளனர். சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்திக்கு மேலுள்ள சுவரில் அஷ்டதிக் பாலகர்கள் வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது விசேஷம். அம்பிகை தேனுகாம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள். முன் மண்டபத்திலுள்ள தூணில் கபிலர், கையில் இலிங்க பூஜை செய்த சிற்பம் இருக்கிறது.
தென்திருவாலவாய் திருக்கோயில், மதுரை
அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மதுரை மாவட்டம்.
+91 452 2344360
காலை 6 .30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் | – | திருவாலவாயர் | |
அம்மன் | – | மீனாட்சி | |
தல விருட்சம் | – | அரசமரம் | |
தீர்த்தம் | – | சிவதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆலவாய் | |
ஊர் | – | மதுரை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மதுரை மாநகரில் சைவசமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவசமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் வெப்பத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயைத் தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி,”தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் இயற்றப்பட்ட திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் செய்து அந்த திருநீற்றை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும்” என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து, தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவத்தொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது.