Category Archives: சிவ ஆலயங்கள்

திருமறைநாதர் திருக்கோயில், திருவாதவூர்

அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில், திருவாதவூர், மதுரை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமறைநாதர்
அம்மன் திருமறைநாயகி
தல விருட்சம் மகிழ மரம்
தீர்த்தம் பைரவதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவாதவூர்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில் இக்கோயில் உள்ள இடம் ஏரியாக இருந்துள்ளது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடைபெற்றபோது தேவர்களுக்கு திருமால் அடைக்கலம் அளித்ததை அசுரர்கள் அறிந்தனர். அதனால் பிருகு முனிவரும் அவரது மனைவியும் அசுரர்களுக்கு அடைக்கலம் அளித்தனர். அசுரர்களை அழிப்பதற்காக தன்னிடம் தரவேண்டும் என்று திருமால் பிருகு முனிவரிடம் கேட்டார். ஆனால் அவரோ தன்னை நாடி வந்து அடைக்கலம் கேட்டவர்களை சரணடைய வைக்க இயலாது என்று கூறிவிட, அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக பிருகு முனிவரின் மனைவியின் தலையை, தனது சக்கராயுதத்தால் கொய்தார். மனைவியை இழந்த பிருகுமுனிவர்,”நீயும் இப்பூலகில் பல பிறவிகள் எடுத்து உன் மனைவியை இழந்து வாடுவாய்என சாபமிட்டார். இந்த சாபத்தை போக்கும் பொருட்டு, மதுரையம்பதி வந்து ஆலவாய் அழகனை தரிசித்துவிட்டு மலர்கள் பூத்துக் குலுங்கிய தடாகத்திற்கு வந்தார். பூஜைக்கு சிவலிங்கம் தேடினார். கிடைக்கவில்லை. அப்போது ஒரு பசு வந்து தடாகத்தின் மத்தியில் இருந்த தாமரைப்பூவின் மீது பாலைச் சுரந்தது. திருமாலும் அருகே சென்று பார்க்க அங்கு சுயம்பு மேனியாய் இலிங்கம் இருக்க அதை எடுத்து பூஜை செய்து வணங்கினான். ஈசன் எழுந்தருளி திருமாலுக்கு சாபம் விமோசனம் கொடுத்தார். பின்னாளில் இது பலரால் பூஜிக்கப்பட்டு ஆலயம் எழுப்பப்பட்டது.

திருக்கரையீஸ்வரர் திருக்கோயில், பெரணமல்லூர்

அருள்மிகு திருக்கரையீஸ்வரர் திருக்கோயில், பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

+91 94867 26471

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருக்கரையீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
தீர்த்தம் கோச்செங்கட்சோழன் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் பெரணமல்லூர்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான கோச்செங்கட்சோழன், கட்டிய கோயில் இது. முற்காலத்தில் பனை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பனையாறு ஓடியது. இதன் கரையில் மன்னன் கோயிலைக் கட்டினான். அம்பாள் திரிபுர சுந்தரிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. கரையில் கோயில் கொண்டதாலும், பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோட்சமாகிய கரைக்கு கரையேற்றி விடுவதாலும் இத்தல சிவனுக்கு திருக்கரை ஈஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது.

இரு படையினர் போர் செய்ததால் ஊருக்கு பேரணிமல்லூர்என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர்ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது.