Category Archives: சிவ ஆலயங்கள்

மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை.

+91 93645 09621

காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொக்கநாதர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சிவ தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோவிச்சடையன்
ஊர் கோச்சடை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

வைகையில் பெரும் வெள்ளம் வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவிட்டார். அந்த உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை வெள்ளத்தை அடைக்க மண் சுமக்க வேண்டும். வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள்யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் வாலிபன் வேடத்தில் வந்து வந்தியிடம், “பாட்டி உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்கு புட்டு தருவாயா? அதாவது நீ அவிக்கும் புட்டில் உதிர்ந்துள்ள புட்டெல்லாம் எனக்கு உதிராத புட்டெல்லாம் உனக்குஎன்று கூற வந்தியும் ஒப்புக் கொள்கிறாள். வந்தி அவிக்கும் புட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்க அதையெல்லாம் இவரே சாப்பிட்டுவிட்டு கரையை அடைக்க மண் சுமக்காமல் உண்ட மயக்கத்தில் அயர்ந்து தூங்கி விடுகிறார். அவ்வழியே வந்த மன்னன் கரையை அடைக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதால் கோபமடைந்து பிரம்பால் அடிக்கிறார். முதுகில் பிரம்படி வாங்கிய பெருமான் துள்ளி ஓடிச் சென்று ஒரு கூடையில் மண்ணை அள்ளிப் போட அதுவரை அடைக்க முடியாத வெள்ளத்துக்கு அணை போடப்பட்ட அதிசயத்தை அனைவரும் கண்டு வியக்கின்றனர். மேலும் அனைவரது முதுகிலும் பிரம்படி தடம் இருப்பது தெரிய வருகிறது. வந்தது ஈசன்தான் என்பதை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்து அவன் தாள் பணிந்து வணங்குகின்றனர். இந்த திருவிளையாடல் புராண வரலாறு நிகழ்ந்த தலம் தான் இது.

மதுநாதசுவாமி திருக்கோயில், இலத்தூர்

அருள்மிகு இலத்தூர் மதுநாதசுவாமி திருக்கோயில், இலத்தூர், திருநெல்வேலி மாவட்டம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மதுநாதசுவாமி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் அனுமன் ஆறு
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இலைத்தூர்
ஊர் இலத்தூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

உலக முதல்வனான சிவபெருமானுக்கும், பார்வதிக்கும், திருக்கைலாயத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததால், பூமி நிலை குலைந்தது. இதையறிந்த சிவபெருமான் குள்ள முனிவரான அகத்தியரைத் தென்திசைக்குச் சென்று பூமியை சமப்படுத்த வேண்டினார். அகத்தியர் தென்திசை நோக்கி வந்த போது அனுமன் ஆறும் குறுக்கிட்டது. அந்த ஆற்றில் நீராடி மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது, இலிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த புளியமரத்திலிருந்து தேன் வடிந்தது.

அகத்தியர் மரத்தின் உச்சியைப் பார்த்தபோது தேன்கூடு ஒன்றைக் கண்டார். சற்று நேரத்தில் இலிங்கத்தின் மீது தேன் கொட்ட ஆரம்பித்தது. இதன்பிறகு மணல் இலிங்கம் இறுகி கல் இலிங்கம் போல் மாறி விட்டது. அதத்தியர் அந்த காட்சியைக் கண்டு மதுநாதா என அழைத்தார். தேனுக்கு மது என்ற பெயரும் உண்டு. தமிழ் வளர்த்த அகத்தியர் உருவாக்கி வழிப்பட்ட இலிங்கம் உடைய கோயிலே மதுநாதசுவாமி கோயில் ஆகும். புளியமரத்தின் இலையின் தூரிலிருந்து தேன் வடிந்ததால் இவ்வூர் இலைத்தூர் என்றாகி காலப்போக்கில் இலத்தூர் ஆனது.