Category Archives: சிவ ஆலயங்கள்
மாணிக்கவாசகர் திருக்கோயில் , சின்னமனூர்
அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் , சின்னமனூர், தேனி மாவட்டம்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மாணிக்கவாசகர் | |
ஊர் | – | சின்னமனூர் | |
மாவட்டம் | – | தேனி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, “தென்னவன் பிரமராயன்” என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து, தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.
அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.
சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றிப் பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு “மாணிக்கவாசகர்” என பெயர் சூட்டினார். தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக, சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மன்னன் மாணிக்கவாசகரைத் தண்டித்தான். சிவன், அவரை விடுவிக்க திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார். தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப் படுகிறது. விழாக்களின்போது இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழிமாத உத்திர நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர், நடராஜர் இருவரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். குருபூஜையன்று தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளவர்கள், இங்கு திருவாசகத்தின் “திருச்சாழல்” பதிகத்தை பாடி வேண்டுகின்றனர். குருபூஜையின்போது, உச்சிக்காலத்தில் “மகேஸ்வர பூஜை” என்னும், சிவனடியார் பூஜை நடக்கும். சிவனடியார்களை சிவனாக பாவித்து திருநீறு, சந்தனம் பூசி மலர் தூவி தீபாராதனை செய்து விருந்து படைக்கின்றனர்.
சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். கோரை பற்களுடன் கூடிய மற்றொரு சனீஸ்வரரை, “கோரசனீஸ்வரர்” என்கின்றனர். மாணிக்கவாசகர் நின்றகோலத்தில் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார். ருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ஜெபமாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏடுடன் இருக்கிறார். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருமலையராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.
திருவிழா : ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
பிரார்த்தனை : அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கவும், திக்குவாய் குறை உள்ளவர்கள் சரியாகவும் இங்கு பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி திருக்கோயில், உத்தரகோசமங்கை
அருள்மிகு மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி திருக்கோயில், உத்தரகோசமங்கை, இராமநாதபுரம் மாவட்டம்.
+91- 4567 – 256 333, 256 214
காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மங்களநாதர் | |
அம்மன் | – | மங்களேஸ்வரி | |
தல விருட்சம் | – | இலந்தை | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | உத்தரகோசமங்கை | |
மாவட்டம் | – | இராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் பழம்பெருமை மிக்கது. இராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள். ஈசனைத் தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து,”நான் மண்டோதரிக்கு காட்சிதரச் செல்கிறேன். திரும்பி வரும்வரை இதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்” எனக் கூறிச்சென்றார்.
சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது இராவணன் அந்த குழந்தை சிவன் என்பதைப் புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி இராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.
சிவன் முனிவர்களிடம் விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது “அக்னி தீர்த்தம்” எனப் பெயர்பெற்றது. அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலைக் காப்பாற்றினார். பிறகு இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.