நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91 4254 272 318, 273 018, 94420 16192

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நஞ்சுண்டேஸ்வரர்
உற்சவர் பிரதோஷ நாயனார்
அம்மன் லோகநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரமடை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

அமுதம் பெற, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது கயிறாகப் பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் நஞ்சை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களைக் காக்க, நஞ்சை விழுங்கினார். அப்போது அம்பிகை, அவரது கழுத்தைப் பிடித்து நஞ்சு உடலுக்குள் செல்லாமல் நிறுத்தினாள். நஞ்சு கழுத்திலேயே தங்கியது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

தேவர்களை காப்பதற்காக நஞ்சை உண்டவர் என்பதால் இவர், “நஞ்சுண்டேஸ்வரர்என்று பெயர் பெற்றார். திருநீலகண்டன் என்றும் இவருக்குப் பெயர் உண்டு.

மத்தியஸ்த நாதர் கோயில், தாருகாபுரம்

அருள்மிகு மத்தியஸ்த நாதர் கோயில், தாருகாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

இவ்வுலகம் பஞ்ச பூதங்களாலானது. இதில் எண்ணற்ற உயிர்களையும் படைத்த சிவபெருமான், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிந்து இயக்கி வருகிறார். உயிர்களின் வினைகளை வேரொடு அழிக்க இலிங்க வடிவில் பல தலங்களிலும் கோவில் கொண்டுள்ளார். அத்தகைய தலங்களில் ஒன்று தாருகாபுரம் மத்தியஸ்த நாதர் ஆலயம். மக்கள் தங்களுக்குள் எவ்விதப் பிணக்கும் இன்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்னும் உண்மையை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது இவ்வாலயம்.


முற்காலத்தில் மாஞ்சோலைகளும் பூஞ்சோலைகளும் நிறைந்து, மனதைக் குளிர வைக்கும் இந்தப் பகுதி தாருகாவனம் எனப்பட்டது. மன்னர்களும் தவயோகிகளும் மக்களும் இளைப்பாறிச் செல்லும் பகுதியாக இது விளங்கியது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் எல்லையில் இருந்தது. அதனால் இதைக் கைப்பற்ற மூவேந்தர்களுக்கிடையே அடிக்கடி சண்டை மூண்டு வந்தது. தங்கள் வசம் இருக்கும் பகுதியை மற்றவர்கள் பறித்துக் கொள்வார்களோ என்ற அச்சம் இருந்ததால், எந்த நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டியதாயிற்று. மனதுக்குள் பிணக்கிருந்தாலும் மேலுக்கு நட்பு பாராட்டிக் காலத்தைக் கடத்தி வந்தார்கள்.