Category Archives: ஆலயங்கள்
மல்லிகார்ஜுன சுவாமி கோயில், கீரனூர்
அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி கோயில், கீரனூர், திண்டுக்கல் மாவட்டம்.
பழநிக்கு வடக்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கீரனூர். இது திண்டுக்கல், ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ளது. 1500 அடி உயரம் சிவலிங்க வடிவில் அமைந்துள்ள மலையொன்றைக் காணலாம். அதன் வடபாகத்தில் அமைந்துள்ளது மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில்.
பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, விராடராஜனின் நாட்டில் தங்கியபோது, இந்த மலைப்பகுதிக்கும் வந்து சென்றனராம். புராணச்சிறப்பு பெற்ற திருத்தலம் கீரனூர்.
மலைஉச்சியிலும், பழமையான மல்லிகார்ஜுன சுவாமி கோயில் ஒன்று உள்ளது. ஒற்றையடிப் பாதையாக அமைந்துள்ள, ஆயிரத்துக்கும் மேலான படிகளைக் கடந்து செல்லவேண்டும். ஒருவர் பின்னே ஒருவராகச் செல்ல வேண்டிய குறுகலான பாதை அது.
அருள்மிகு மாங்குடி சாத்தையனார் நருவிழி அம்மன், மாங்குடி
அருள்மிகு மாங்குடி சாத்தையனார் நருவிழி அம்மன், மாங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு மேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது கீழாநிலை கோட்டை கிராமம். ஒருகாலத்தில் பாண்டிய மன்னர்கள் கோட்டை கட்டி ஆண்ட பகுதி. ஊரின் தெற்கு கோடியில் சிதிலம் அடைந்து கிடக்கும் கோட்டையே அதற்கு சாட்சி. இந்த ஊரின் வடக்கு எல்லையில் மாங்குடி கண்மாயின் விளிம்பில் கோயில் கொண்டிருக்கிறார் மாங்குடி சாத்தையனார்.
முற்காலத்தில் இது வனாந்திரமாக இருந்தது. ஆயர்குல மக்கள் மட்டுமே இங்கு நடமாடுவர். கீழா நிலைகோட்டையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள இராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சாராருக்கு, விளை நிலம் தொடர்பான வழக்கு ஒன்று திருமயம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக இராயபுரம் மக்கள் அடிக்கடி திருமயம் சென்று வந்தனர். அது, போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம். எனவே, நீளமான மூங்கில் கம்பு ஒன்றில் ‘டோலி‘ போல கட்டுச் சோற்றைக் கட்டித் தொங்கவிட்டபடி, வனப்பகுதி வழியாக திருமயம் கோர்ட்டுக்கு வருவார்களாம். வழியில், இப்போது மாங்குடி சாத்தையனார் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில், ஆடு மேய்க்கும் ஆயர் குலப் பெரியவர் ஒருவர், சிறிய கல் ஒன்றை வைத்து வணங்கி வந்தார். காட்டு மலர்களைக் கொண்டு அவர் பூஜிப்பதை வேடிக்கைப் பார்த்தபடி செல்வார்கள் இராயபுரம் மக்கள். அன்று தீர்ப்பு சொல்லும் நாள். வழக்கம் போல் வனத்தின் வழியே வந்தவர்கள், பெரியவரைக் கண்டனர். அவரிடம், “நீங்கள் இந்தக் கல்லை வணங்கி வருவதை நாங்கள் அறிவோம். இந்தக் கல்லுக்கு அப்படி என்ன மகிமை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “உங்களது கண்களுக்கு இது கல்லாக தெரிகிறது. எனக்கு, இதுவே கண்கண்ட தெய்வம். நீங்கள் போகும் காரியம் ஜெயிக்க வேண்டும் என்று இந்த தெய்வத்திடம் வேண்டிச் செல்லுங்கள். நல்லது நடக்கும்; இல்லையெனில் என்னைக் கேளுங்கள்” என்றார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ராயபுரம் மக்கள், “இன்று எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், தலைமுறை தலைமுறைக்கும் உன்னை வணங்குகிறோம்” என்று பிரார்த்தித்துச் சென்றனர்.