அருள்மிகு மாங்குடி சாத்தையனார் நருவிழி அம்மன், மாங்குடி
அருள்மிகு மாங்குடி சாத்தையனார் நருவிழி அம்மன், மாங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு மேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது கீழாநிலை கோட்டை கிராமம். ஒருகாலத்தில் பாண்டிய மன்னர்கள் கோட்டை கட்டி ஆண்ட பகுதி. ஊரின் தெற்கு கோடியில் சிதிலம் அடைந்து கிடக்கும் கோட்டையே அதற்கு சாட்சி. இந்த ஊரின் வடக்கு எல்லையில் மாங்குடி கண்மாயின் விளிம்பில் கோயில் கொண்டிருக்கிறார் மாங்குடி சாத்தையனார்.
முற்காலத்தில் இது வனாந்திரமாக இருந்தது. ஆயர்குல மக்கள் மட்டுமே இங்கு நடமாடுவர். கீழா நிலைகோட்டையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள இராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சாராருக்கு, விளை நிலம் தொடர்பான வழக்கு ஒன்று திருமயம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக இராயபுரம் மக்கள் அடிக்கடி திருமயம் சென்று வந்தனர். அது, போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம். எனவே, நீளமான மூங்கில் கம்பு ஒன்றில் ‘டோலி‘ போல கட்டுச் சோற்றைக் கட்டித் தொங்கவிட்டபடி, வனப்பகுதி வழியாக திருமயம் கோர்ட்டுக்கு வருவார்களாம். வழியில், இப்போது மாங்குடி சாத்தையனார் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில், ஆடு மேய்க்கும் ஆயர் குலப் பெரியவர் ஒருவர், சிறிய கல் ஒன்றை வைத்து வணங்கி வந்தார். காட்டு மலர்களைக் கொண்டு அவர் பூஜிப்பதை வேடிக்கைப் பார்த்தபடி செல்வார்கள் இராயபுரம் மக்கள். அன்று தீர்ப்பு சொல்லும் நாள். வழக்கம் போல் வனத்தின் வழியே வந்தவர்கள், பெரியவரைக் கண்டனர். அவரிடம், “நீங்கள் இந்தக் கல்லை வணங்கி வருவதை நாங்கள் அறிவோம். இந்தக் கல்லுக்கு அப்படி என்ன மகிமை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “உங்களது கண்களுக்கு இது கல்லாக தெரிகிறது. எனக்கு, இதுவே கண்கண்ட தெய்வம். நீங்கள் போகும் காரியம் ஜெயிக்க வேண்டும் என்று இந்த தெய்வத்திடம் வேண்டிச் செல்லுங்கள். நல்லது நடக்கும்; இல்லையெனில் என்னைக் கேளுங்கள்” என்றார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ராயபுரம் மக்கள், “இன்று எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், தலைமுறை தலைமுறைக்கும் உன்னை வணங்குகிறோம்” என்று பிரார்த்தித்துச் சென்றனர்.
தீர்ப்பு வாசிக்கப்பட்டது. இராயபுரத்து மக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தார் நீதிபதி. சந்தோஷத்துடன் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக கீழாநிலை கோட்டை வனத்துக்கு வந்து சேர்ந்தனர் இராயபுரத்து மக்கள். ஆனால், அங்கு பெரியவரைக் காணோம்; கல் மட்டுமே இருந்தது. அப்போது ஓர் அசரீரி, “வயோதிகனாக வந்து உங்களுக்கு காட்சி கொடுத்தது நான்தான். இங்கே சாஸ்தாவாக அவதரித்துள்ளேன். இனி, என்னை நினைத்து நீங்கள் எந்தக் காரியத்தை தொடங்கினாலும் துலங்கும்” என்றது.
உற்சாகமடைந்த இராயபுரத்து மக்கள் வனத்தை அழித்து, சிறிய கோயில் ஒன்றை எழுப்பி, அந்தக் கல்லை பிரதிஷ்டை செய்து, ‘சாஸ்தா‘ என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தனர். பிற்காலத்தில் காடுகரைகள் அழிந்து, நாடுநகரங்கள் உருவானபோது, கோயிலுக்கு அருகில் மாங்குடி கண்மாயும் உருவானது. இதன் கரையில் இருந்ததால் சாஸ்தாவுக்கு, ‘மாங்குடி சாஸ்தா‘ என்ற பெயர் வந்தது. இதுவே, காலப்போக்கில் மாங்குடி சாத்தையனார் ஆனது. இங்கு, சாத்தையனார் மட்டுமின்றி ஆக்ரோஷமாக காட்சி தரும் நருவிழி அம்மனும் அருள்பாலிக்கிறாள். இவள், இங்கு குடிகொண்டதற்கும் ஒரு கதை உண்டு.
வழக்கில் ஜெயித்ததைத் தொடர்ந்து, ஒரு பிரிவினர் இராயபுரத்தில் இருந்து கீழாநிலைகோட்டைக்கு அருகில் (சுமார் 7 கி.மீ. தொலைவு) உள்ள அம்புரணை என்ற கிராமத்துக்கு குடிபெயர்ந்தனர். இவர்களில், மூர்த்தி என்பவருக்கும் அம்புரணையைச் சேர்ந்த இன்னொரு நபருக்கும் சொத்துப் பிரச்னையால் சண்டை முற்றியது. ஊர் மக்கள் விசாரித்து பஞ்சாயத்து செய்தனர். அப்போது, மூர்த்தியின் பக்கமே தவறு இருப்பதாகத் தெரிவித்தனர் பஞ்சாயத்தார். ஆனால், மூர்த்தி இதற்கு கட்டுப்படவில்லை. அந்தக் காலத்தில், பஞ்சாயத்தாரது தீர்ப்புக்கு கட்டுப்படாதவர்களை சிங்கம்புணரி எனும் ஊரில் உள்ள பிடாரி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று, சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். அங்கு, பிடாரி அம்மனுக்கு எதிரில் கொப்பரையில் கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில், வலது கையை முழங்கை மூழ்கும் அளவுக்கு முக்கி எடுக்க வேண்டும். அப்போது, கையில் கொப்புளங்கள் ஏற்படவில்லையெனில், சம்பந்தப்பட்டவர் குற்றமற்றவர் என்று அர்த்தம். கொப்புளங்கள் ஏற்பட்டால், குற்றத்தை ஒப்புக் கொண்டு, தீர்ப்புக்கு கட்டுப் பட்டு ஊரைவிட்டே போய்விட வேண்டும். ‘பிடாரியிடம் சத்தியம் கட்டுகிறேன்‘ என்று பஞ்சாயத்தில் வீராப்பாக சொல்லிவிட்டு வந்த மூர்த்திக்கு பயம். ‘பொய் சத்தியம் செய்தால் கை கொப்பளித்து விடுமே! பொய் சத்தியம் செய்தாலும், எந்த பாதிப்பும் இன்றி தப்பிக்க என்ன வழி?’ என்று யோசித்தார். இந்த நிலையில், அருகில் உள்ள பெரியகோட்டை கிராமத்தில் ஆதிசெல்லன் என்ற மந்திரவாதி இருப்பதை அறிந்தார் மூர்த்தி. இந்த ஆதிசெல்லன், 102 மலையாள காளிகளைக் கொண்டு மாந்திரீகம் மூலம் நாற்று நடுதல், களை எடுத்தல், கதிர் அறுத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். இவரிடம் வந்த மூர்த்தி, சத்தியத்திலிருந்து தப்பிக்க வழி கேட்டார். உடனே, ”என்னிடம் உள்ள காளிகளைக் கொண்டு உனது கஷ்டத்தைப் போக்குகிறேன். சத்தியம் செய்யப் போகும்போது, ஒரு கூடை நிறைய நெல் பொரியை எடுத்துச் சென்று, அதை வழி நெடுகப் போட்டுக் கொண்டே போ. என்னிடம் உள்ள காளிகளில் ஒன்று பொரியை பொறுக்கியபடி உன்னைப் பின்தொடரும். பிடாரியின் வாசலுக்கு நீ சென்றதும் மற்றதை அது பார்த்துக் கொள்ளும்” என்றார் ஆதிசெல்லன். அன்று சத்தியம் செய்யும் நாள். ஆதிசெல்லன் சொன்னது போலவே, நெல் பொரியை வழி நெடுகப் போட்டபடி சிங்கம்புணரி நோக்கி நடந்தார் மூர்த்தி. அவற்றைப் பொறுக்கியபடி 102 காளிகளில் ஒன்றும் மூர்த்தியைப் பின்தொடர்ந்தது. ஆனால், சிங்கம்புணரி எல்லையை தொடும் முன்பே மூர்த்தியிடம் இருந்த பொரி தீர்ந்து போயிற்று. இதனால் மறுபடியும் ஆதிசெல்லனிடமே திரும்பியது காளி. இதைக் கண்டு பதறிய மூர்த்தி, சத்தியம் கட்டப் போகாமல் தலைதெறிக்க ஆதிசெல்லனிடமே ஓடி வந்தார். “இந்த முறை நீ செல்லும்போது, என்னிடம் உள்ள ஆதிசெல்லன் காளியை அனுப்புகிறேன். நெய் கொப்பரைக்கு எதிரே நின்று, பிடாரியின் முகத்தையே பார்த்துக் கொண்டிரு. நான் ஏவி விடும் ஆதிசெல்லன் காளி, ஆவாரம்பூ இதழ் போல வந்து பிடாரியின் கண்களை மறைத்து விடுவாள். இது உனக்கு மட்டுமே தெரியும். அந்த நேரத்தில் நெய் கொப்பரைக்குள் கையை முக்கி எடு. பிடாரியால் உன்னை எதுவும் செய்ய முடியாது” என்றார் ஆதிசெல்லன். அதன்படியே செய்து, எந்த பாதிப்பும் இன்றி தப்பினார் மூர்த்தி. ஆதிசெல்லன் காளியின் சக்தி, அவரை பிரமிக்க வைத்தது. எனவே ஆதிசெல்லனிடம் வந்து, “இந்தக் காளியை எனக்கே கொடுத்து விடு” என்று கேட்டார். இதற்கு சம்மதித்த ஆதிசெல்லன், “இந்தக் காளியை வீட்டில் வைத்து தீனி போட முடியாது. எனவே, கிராமத்துக்கு வெளியே இருக்கும் சாஸ்தா கோயிலில் கருப்பருக்கு பின்னே வைத்து விடு. அங்கு வரும் நைவேத்தியங்களை சாப்பிட்டு விட்டு, பேசாமல் இருக்கும். ஆனால், இந்தக் காளி உனது சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படும்” என்றார்.
இதையடுத்து சாஸ்தா கோயிலில், ‘நறுவிலி‘ என்ற அபூர்வ வகை காட்டு மரத்தின் நிழலில் காளியை பிரதிஷ்டை செய்தார் மூர்த்தி. இந்த மரத்தின் பெயரும் சேர்ந்து கொள்ள காளிக்கு, ‘நறுவிலி அம்மன்‘ என்று பெயர் வந்தது. இதுவே, ‘நருவிழி அம்மன்‘ என மருவியது.
ஆலயத்தின் மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் மாங்குடி சாத்தையனார். வெளி மண்டபத்தில் வலப் புறமாக ஆதி சாஸ்தா மற்றும் அகத்தியர். இடது புறம் மகாகாளரும், இவருக்கு எதிரே பட்டவரும் காட்சி தருகின்றனர். பின் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் கன்னி மூல கணபதி அருள்புரிகிறார். மண்டபத்தில் இருந்து சற்று தள்ளி கருப்பண்ணசாமியும் நருவிழி அம்மனும் தனித்தனி சந்நிதிகளில் வடக்கு நோக்கி காட்சி தருகின்றனர். கருப்பண்ணசாமிக்கு அருகே குதிரை சிலைகள் கம்பீரமாக நிற்கின்றன. ஆலய முகப்பில் யானை சிலைகளும் உண்டு.
கீழாநிலைக்கோட்டையைச் சுற்றியுள்ள 84 ஊர் நாட்டார்களது குலதெய்வம் அரியநாயகி அம்பாள். இவளுக்கும் கீழாநிலைக் கோட்டையில் கோயில் உள்ளது. மாங்குடி சாத்தையனாரின் சகோதரிதான் இந்த அம்பாள். இவளுக்கு, ஆடி மாதத்தில் செவ்வாய்த் திருவிழா களை கட்டும். திருவிழாவின் 7ஆம் நாள் மாலை மாங்குடி சாத்தையனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிறகு, மாங்குடி கண்மாய்க் கரையில் பொங்கல் வைத்து படையலிட்டு, எருதுகட்டு (ஒரு வகை மஞ்சு விரட்டு) நடைபெறுகிறது.
மேலும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் நடைபெறும் புரவி எடுப்பு திருவிழாவும் இங்கு வெகு பிரசித்தம். ஒரு மாதத்துக்கு முன்னதாகவே குதிரைகளை செய்ய, மாங்குடியாருக்கு பூஜை வைக்கும் வேளார் இனத்தாரிடம் ஊர்மக்கள் பிடிமண் கொடுக்கின்றனர். ஆலயத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கும் கொசவப்பட்டி என்ற கிராமத்தில்தான் குதிரை பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன. புரவி எடுப்பு நாளன்று மேள தாளத்துடன் கொசவப் பட்டிக்கு செல்லும் கிராமத்தவர், அங்கு தயாராகி நிற்கும் குதிரை பொம்மைகளுக்கு பூஜை செய்வார்கள். பிறகு, அவற்றை அங்கிருந்து தூக்கி வந்து, ஆலயத்தின் எதிரே உள்ள பொட்டலில் வைக்கின்றனர். மதியம் அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சி என்று திருவிழா நிறைவு பெறுகிறது. இதேபோல் மாசி சிவராத்திரியும் இங்கு விசேஷம். அன்று மாங்குடி சாத்தையனாருக்கும் பிற தெய்வங்களுக்கும் ஆறு கால பூஜைகள் நடைபெறும். மறு நாள், பால் குடம், அக்னிக் காவடி எடுத்தல், பூக்குழி இறங்குதல் முதலான வைபவங்கள் நடைபெறும்.
திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர் குழந்தை வரம் கேட்பவர்கள், அம்மனுக்கு எதிரே இருக்கும் நறுவிலி மரத்தில் மரத்தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கின்றனர். மேலும், திருமண வரம் கேட்பவர்களுக்கும் தீராத நோயால் அவதிப்படும் கணவனுக்காக பிரார்த்திக்கும் பெண்களுக்கும் கை மேல் பலன் தருகிறாள் நருவிழியாள். பிரார்த்தனை பலித்ததும் நறுவிலி மரத்தில் வளையல், காதோலை மற்றும் கருக மணி முதலானவற்றை கட்டிச் செல்கின்றனர்.
இப்படி, நருவிழியாள் பேரைச் சொன்னாலே நல்லது நடக்கும் அதேநேரத்தில், மோசநாசம் செய் பவர்களை உண்டு இல்லை என்றாக்கி விடுவாள். மோசக்காரர்களை தட்டிக் கேட்க இயலாதவர்கள், ‘நருவிழி தாயே, நீ இருக்கறது நெசம்னா அவங்களுக்கு நீதான் தண்டனை கொடுக்கணும்‘ என்று வேண்டிக் கொண்டு, ஒண்ணேகால் ரூபாயை படிக்கட்டி (காணிக்கை அளித்தல்) விட்டுப் போகின்றனர். இன்னும் சிலர், அம்மன் சந்நிதிக்கு எதிரில் காசை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டுச் செல்கின்றனர். இதற்கெல்லாம் உடனடி பலன் கொடுக்கிறாள் நருவிழியாள்.
பழைய மாங்குடி சாத்தையானார் நருவிழி அம்மன் கோயில்
அய்யனாருக்கு இடதுபுறம் அருள்மிகு மகாகாளர் சன்னதி உள்ளது. ஒரு முறை அய்யனார் மற்றும் அகத்தியர் சிலைகளை திருடிச்சென்று விட்டனர்.சில மாதங்கள் கழித்து குடிமக்களின் கனவில் வந்து திருடர்கள் புதைத்து வைத்த இடம் தோண்டி, சிலைகளைக் கண்டு எடுத்து, மீண்டும் பிரதிட்டை செய்தனர். மகா சிவராத்திரி மறுநாள் அன்று நாள்முழுதும் நடைபெறும் அன்னதானம் மிகவும் சிறப்பானது.+91 (0) 4333-245663 Pazaiya Mangudi Sasthaa Ayyanar Temple
பழைய அல்லது ஆதி மாங்குடி சாஸ்தா கோயிலின் குடிமக்களில் சில பங்காளிகள் சண்டை கொண்டு முக்கிய சாலையின் மேலேயே இருந்த சுப்பிரமணியர் கோவிலை மாற்றி புது மாங்குடி சாத்தையானார் கோயிலாக கட்டி வழி பட்டு வருகின்றனர். எங்கு யாராகினும் அய்யனாரையும் நருவிழி அம்பாளையும் வழிபட வேண்டிய வரம் கிடைப்பது திண்ணம்.
அருமை