Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி, சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
அம்மன் ஆனந்தவல்லி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நெமிலிச்சேரி
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சித்தராகவும், சிவபித்தராகவும் இருந்து பல இடங்களில் ஈஸ்வரனை இலிங்க வடிவில் ஸ்தாபித்து பூஜை செய்தார் அகத்தியர். பின்னாளில் அந்த இலிங்கம் அமைந்த இடமே இறைவன் உறையும் பெரிய திருத்தலங்களாக மாறிவிட்டன. இப்படி அகத்திய முனிவரால் இலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட தலங்களுள் ஒன்று, நெமிலிச்சேரி, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள் இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.

நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். செருவு என்றால் கூட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் நெமிலிச்சேரி எனப் பெயர் பெற்றதாம். இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கியவளாக அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர வடிவிலான ஆவுடையார்மீது வீற்றிருந்து அருள்கிறார். ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருவதால், நமது வாழ்வில் ஏகபோக மகிழ்ச்சிகள் உருவாக அருள்பாலிப்பவராக விளங்குகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.

அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம்

அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை மாவட்டம்.

+91- 44 – 2617 3306, 2617 0456, 94448 07899 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சவுமிய தாமோதரப்பெருமாள்

தாயார்

அமிர்தவல்லி

தீர்த்தம்

அமிர்தபுஷ்கரிணி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

வில்வாரண்யம்

ஊர்

வில்லிவாக்கம்

மாவட்டம்

சென்னை

மாநிலம்

தமிழ்நாடு

திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் விளையாடச் சென்றுவிடுவார். பொறுத்துப்பார்த்த யசோதை, ஒருசமயம் கிருஷ்ணர் வெளியில் செல்லாதபடி அவரது இடுப்பில் கயிறை சுற்றி, ஒரு உரலில் கட்டி வைத்துவிட்டார். ஆனாலும் கிருஷ்ணர் உரலையும் சேர்த்து இழுத்துச்சென்று இரண்டு அசுரர்களுக்கு விமோசனம் கொடுத்தார். இவ்வாறு யசோதை கட்டிவிட்ட கயிறு அழுத்தியதில் கிருஷ்ணரின் வயிற்றில் தழும்பு உண்டானது. எனவே இவர், “தாமோதரன்என்ற பெயர் பெற்றார். “தாமம்என்றால் கயிறு, “உதரம்என்றால் வயிறு எனப்பொருள். இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் தாமோதரனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் புன்னகை ததும்ப, அழகாக காட்சி தருவதால், “சவுமிய தாமோதரர்என்று அழைக்கப்படுகிறார்.

சித்திரையில் சுவாமி அவதார உற்ஸவம் நடக்கிறது. திருப்பதி தலத்தைப்போலவே இங்கும், சுவாமிக்கு வடக்கு திசையில் (குபேர மூலையில்) அமிர்தபுஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. ஆடி பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச விழா நடக்கிறது. அப்போது, சுவாமி கருட வாகனத்தில் தீர்த்தத்திற்கு எழுந்தருளி யானை, முதலைக்கு மோட்சம் கொடுக்கிறார். மகர சங்கராந்தியன்று (தைப்பொங்கல்) சுவாமி, ஸ்ரீவில்லிப்புத்தூர் இராஜமன்னார் அலங்காரத்தில் ஆண்டாளுடன் புறப்பாடாவது விசேஷம்.