அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி, சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
அம்மன் ஆனந்தவல்லி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நெமிலிச்சேரி
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சித்தராகவும், சிவபித்தராகவும் இருந்து பல இடங்களில் ஈஸ்வரனை இலிங்க வடிவில் ஸ்தாபித்து பூஜை செய்தார் அகத்தியர். பின்னாளில் அந்த இலிங்கம் அமைந்த இடமே இறைவன் உறையும் பெரிய திருத்தலங்களாக மாறிவிட்டன. இப்படி அகத்திய முனிவரால் இலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட தலங்களுள் ஒன்று, நெமிலிச்சேரி, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள் இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.

நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். செருவு என்றால் கூட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் நெமிலிச்சேரி எனப் பெயர் பெற்றதாம். இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கியவளாக அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர வடிவிலான ஆவுடையார்மீது வீற்றிருந்து அருள்கிறார். ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருவதால், நமது வாழ்வில் ஏகபோக மகிழ்ச்சிகள் உருவாக அருள்பாலிப்பவராக விளங்குகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.

வியாதிகளை விரட்டும் விடைவாகனரது கருவறையை விட்டு வெளியே வந்தால், கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, மற்றும் விஷ்ணு துர்க்கையும், கருவறைக்கு இடது புறம் வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் நால்வர் சன்னதிகள் அமைந்துள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்க, அதற்கு எதிரில் மேற்குப் பார்த்த சூரியன், சந்திரனோடு பைரவரும் சேர்ந்து ஒரே சன்னதியில் அருள்பாலிப்பது வித்தியாசமான காட்சி. கோயிலுக்கு வெளியே இடதுபுறத்தில் அகத்திய புஷ்கரணி அமைந்துள்ளது. அதன்கரையில் மிகப்பெரிய அரசமரமும், அதன்கீழ் நாகதேவதைகள், பிள்ளையார், பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி சிலையும் அமைந்துள்ளன. சூரியன், சந்திரனோடு பைரவரும் ஒரே சன்னதியில் இருப்பது கோயிலின் தனி சிறப்பு.

திருவிழா:

சிவராத்திரி, திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், நவராத்திரி பிரதோஷம்.

கோரிக்கைகள்:

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பிரச்சனைகள் தீர இங்குள்ள சுவாமியையும் அம்மனையும் வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

2 Responses to அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி

  1. ramani says:

    please also mention/update the location, as there a 2 nmelichey, nes chrompet and tirunidravur, and this temple not marked in google map.

  2. If Time permits, I will do it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *