Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் கோயில், தாளக்கரை

அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் கோயில், தாளக்கரை, மங்கரசவளையபாளையம், சேவூர் வழி, அவிநாசி தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4296 – 288 254, 99422 75502 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இலட்சுமி நரசிம்மர்
தல விருட்சம் ஈஞ்சமரம்
தீர்த்தம் தெப்பம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தாவாய்பட்டினம்
ஊர் தாளக்கரை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

இரணியன் என்னும் அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்மர். பக்த பிரகலாதனின் தந்தையான இரண்யன், தன்னை யாராலும் அழிக்க முடியாதபடி வித்தியாசமான வரம் பெற்றிருந்தான். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். அப்போது அவர் மிக உக்கிரமாக இருந்தார். உக்கிரம் தணிக்க மகாலட்சுமி, அவரது மடியில் அமர்ந்தார். நரசிம்மர் சாந்தமானார். இதன் அடிப்படையில் இலட்சுமி நரசிம்மர் கோயில்களில் சுவாமியின் மடியில், மகாலட்சுமி அமர்ந்திருப்பாள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, சுவாமிக்கு இடதுபுறம் தனியே இருக்கிறாள். நரசிம்மர், மகாலட்சுமியை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார். மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்ராமம் இருக்கிறது. இந்த சாளக்ராமமே, முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை ஆதிமூர்த்திஎன்கிறார்கள்.

அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம்

அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4252 – 278 644 , 93451-96814 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாணவரதராஜர்
தாயார் வேதவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அமராவதி தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சங்கரராம நல்லூர்
ஊர் கொழுமம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை சோழமன்னன் ஒருவன் ஆட்சி செய்தபோது, நாட்டில் மழை வளம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றியது. இதனால், மக்கள் பஞ்சத்தில் வாடினர். நாட்டில் குறைவிலாது மழை பெய்து, மக்கள் வாழ்வில் சிறக்க அருளும்படி மன்னர், மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு, மழைவளம் அருளினார். நாடு செழித்தது. மக்களுக்கு அருளிய மகாவிஷ்ணுவிற்கு மன்னர், இவ்விடத்தில் கோயில் கட்டினார்.
இத்தலத்திற்கு அருகில் சிவாலயம் ஒன்று உள்ளது. சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வூர் முன்பு சிவனின் திருப்பெயரான சங்கரன்பெருமாளின் திருநாமமான ராமன்என்ற பெயர்களை இணைத்து சங்கரராமநல்லூர்என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால், சுவாமிக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் உள்ள வேதவல்லி தாயாருக்கு வில்வ இலைகளைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகிறது.

அமராவதி நதியின் தென்கரையில் சுற்றிலும் பசுமையுடன் அமைந்துள்ள இத்தலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர் திருமணக்கோலத்திலும், அவருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் தாயாரும் அருளுகின்றனர். முன் புறம் கருடாழ்வார் இருக்கிறார். சுவாமியின் பாதமும் உள்ளது.
கோயில் முகப்பில் உள்ள மண்டபத்தின் தூணில் இருக்கும் வீரஆஞ்சநேயர், வாயுமூலையை பார்த்தபடி வரதராஜரை நோக்கி உள்ளார். இதன்மூலம் தன் தந்தைக்கும், நாராயணனுக்கும் ஒரே நேரத்தில் மரியாதை தருவதை இங்கு காணமுடிகிறது. இவரது திருவுருவத்திற்கு மேலே சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. வியாச முனிவர், இவரை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றுள்ளார். கோயில் வளாகத்திற்கு வெளியே கொடிமரம் உள்ளது.