Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வட பழநி

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வட பழநி, சென்னை மாவட்டம்.

+91-44-2483 6903 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வடபழநி ஆண்டவர்
தீர்த்தம் திருக்குளம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வடபழநி
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

அண்ணாசாமி தம்பிரான் :

இவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர். இவர்தன் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து, பழநியிலிருந்து வாங்கி வந்த பழநிஆண்டவர் படத்தை அங்கு வைத்துப் பூஜை செய்தவர். இவர் வைத்துப் பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தினசாமி தம்பிரான் :

இவரும் ஆண்டவருக்குப் பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.

பாக்யலிங்க தம்பிரான் :

இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்பகிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோயிலுக்குப் பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.

அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர்

அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர், கோயம்புத்தூர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

உத்தண்ட வேலாயுத சுவாமி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

ஊதியூர்

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. சிவனைக் கண்டு வணங்கியவர் இவர்; மேற்கே உள்ள ஊதியூர் மலையில் தவம் செய்த அவர், ஊதி, ஊதி பொன் தயாரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. மட்டமான உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடபுறம், கொங்கண சித்தர் பொன் ஊதியதற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.

ராம லக்ஷ்மணனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது, அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை சஞ்சீவி மலைஎன்றும் ஊதியூர் மலைஎன்றும் அழைக்கப்படுகிறது. மலையில் உத்தண்ட வேலாயுத சுவாமி எழுந்தருளியுள்ளார். மலையின் இடைப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. மலைப்பகுதியின் தொடக்கத்தில் மிகவும் அழகிய மயில் மண்டபம் உள்ளது. அடுத்து இருப்பது பாதவிநாயகர் கோவில், வழியில் வடபுறம் இடும்பன் கோயிலும், தென்புறம் அனுமந்தராயன் கோயிலும் உள்ளன. கடந்து மேலே சென்றால் நுழைவாயிலோடு கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அதைக் குறட்டு வாசல் என்பர். சித்தர்கள் வாழ்ந்த இம்மலைமீது விளங்கும் இறைவனை தரிசித்தவர், வாழ்வில் தரித்ததிரங்கள் நீங்கி வளம் பெறுவர் என்பது ஐதீகம்.